
அறிமுகம்
எண்பதுகளில் ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பெண்கவிஞர்கள் முக்கிய இடம் பெறுகின்றார்கள். முன் எப்போதும் இல்லாத வகையில் இக்காலப் பகுதியிலேயே இங்கு இளம் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் இலக்கியத் துறையில், குறிப்பாகக் கவிதைத் துறையில் பிரவேசித்தனர். இவர்களில் பெரும்பாலோர் பல்கலைக்கழகங்களில் பயின்றவர்கள்; பெண்கள் தொடர்பான சமூக இயக்கங்களுடனும் நிறுவனங்களுடனும் தொடர்புடையவர்கள்; வெவ்வேறு அளவில் பெண்நிலைவாதச் சிந்தனைகளின் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள். எண்பதுகளில் ஈழத்தில் உருவாகிய ஒரு புதிய சமூக, அரசியல், கலாசாரப் பிரக்ஞையின் ஒரு முக்கிய கூறாக இவர்களது இலக்கியப் படைப்புக்கள் அமைகின்றன. இவர்களது கவிதைகளில் இன்றையச் சூழலில் பெண்களின் இருத்தல் பற்றிய பிரச்சனைகளுமே பிரதான இடம் பெறுகின்றன. இவ்வகையில் இக்காலப் பகுதியில் எழுதத் தொடங்கிய பதினொரு பெண்கவிஞர்களின் 24 கவிதைகளைக் கொண்ட கவிதைத் தொகுதி ஒன்று 'சொல்லாத சேதகள்' என்ற தலைப்பில் எண்பதுகளின் பிற்பகுதியில் (1986) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. இன்றைய ஈழத்துப் பெண்களின் கலாசார விழிப்புணர்வையும் சமகாலப் பிரச்சனைகள் பற்றிய அவர்களது பிரக்ஞையையும் வெளிப்படுத்தும் இத்தொகுப்பு அதன் முக்கியத்துவம் கருதி உடனடியாக தமிழகத்தில் மறுபிரசுரம் பெற்றது.
'விலங்கிடப்பட்ட மானுடம்' என்னும் இக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் சுல்பிகா சமூகப் பிரக்ஞை கொண்ட ஈழத்துப் பெண்கவிஞர் வரிசையில் எண்பதுகளின் பிற்பகுதியில் வந்து சேர்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான இவர், சுமார் பத்து ஆண்டு காலம் விஞ்ஞான ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். கொழும்புப் பலகலைக் கழகத்தின் கல்வியியல் டிப்ளோமாப் பட்டமும் பெற்ற இவர் தற்போது இலங்கைத் தேசிய கல்வி நிறுவகத்தில் செயல்திட்ட அதிகாரியாகவும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அதிதி விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். பெண்களின் முன்னேற்றம், விஞ்ஞானக் கல்வி, கல்விச் சிந்தனைகள் என்பண தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளும் எழுதிவரும் இவர் கவிஞராக மட்டுமன்றி ஓர் இளம் ஆய்வறிவாளராகவும் முகிழ்த்துள்ளார். விலங்கிடப்பட்ட மானுடம் என்ற இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் ஈழத்துப் பெண்கவிஞர் வரிசையில் சுல்பிகாவுக்கும் ஓர் முக்கிய இடம் உண்டு என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இத்தொகுப்பில் 20 கவிதைகள் உள்ளன. 1983இல் எழுதப்பட்ட பெண் என்ற கவிதையைத் தவிர பிற கவிதைகள் அனைத்தும் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் எழுதப்பட்டவை. சுல்பிகாவின் எல்லாக் கவிதைகளுமே சமகால வாழ்வின் பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவரது சமூகப் பிரக்ஞையின் வெளிப்பாடாக அமைபவை. பெண்மையின் உயிர்ப்பை மட்டுமன்றி, முழு மானுடத்தின் உயிர்ப்பையும் அவர் அவாவி நிற்கின்றார். அவ்வகையில் மனிதத்துவத்தின் உயிர்ப்பே இவரது கவிதைப் பொருளின் சாரம் எனலாம். இன்றைய வாழ்நிலை அழுத்தத்தில் விலங்கிடப்பட்டுக் கிடக்கும் மானுடம் சகல தளைகளில் இருந்தும் அடக்கு முறைகளில் இருந்தும் விடுபட்டு உயிர்த்தெழு வேண்டும் என்பதே இவரது கவிதைகளின் அடிக்குரலாக ஒலிக்கின்றது.
இவரது பெரும்பாலான கவிதைகள் இன்றைய ஈழத்தின் அன்றாட வாழ்க்கை அனுபவத்தில் இருந்து பிறந்தவை. கடந்த பத்தாண்டுகளில் துப்பாக்கிகளின் எழுச்சியும் மனிதத்துவத்தின் அழிவும் எமது அன்றாட அனுபவத்தின் பிரதான பகுதியாகி விட்டது. சமகால ஈழத்துத் தமிழ்க் கவிதையில் இந்த அனுபவம் பிரதான இடம் பெற்றிருப்பது இயல்பானதுதான். கறைபடிந்த அதிகாலை, ஒரு புற்று நோயாளியும் நானும், இருப்பின் மறுப்பு, போர் இரவுகளின் சாட்சிகள் முதலிய கவிதைகளில் சுல்பிகா தன் நோக்கில் இந்த அனுபவத்தை பதிவுசெய்திருக்கிறார். துப்பாக்கி மனிதன் மனித நேயத்துக்கு எப்போது அடிமையாகப் போகிறான் என்பதே இவரது ஆதங்கம். கடந்த பத்தாண்டு கால அனுபவத்தில் ஈழத்துக் கவிதை பெரும்பாலும் துப்பாக்கியின் எதிரியாகி விட்டது. அது இப்போது மனித நேயத்தைப் பற்றியே பாடவேண்டியுள்ளது. இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் மனிதநேயத்தின் குரலாகவும் உள்ளன.
மனித சமூகம் நெடுங்காலமாக ஆணாதிக்க சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது. எல்லா நிலைகளிலும் ஆணாதிக்கக் கருத்து நிலையே சமூகத்தில் வேரூன்றியுள்ளது. 'தாயி சிறந்ததொரு கோயிலும் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பது அங்கீகரிக்கப்பட்ட கருத்து நிலையின் வெளிப்பாடாகும். தாய் (பெண்) புனிதமானவ்ள் பூசிக்கத் தக்கவள் எனினும் தந்தையே (ஆண்) அதிகாரம் உள்ளவன் என்பது இதன் பொருள். இதனை ஆண் ஆதிக்கக் கருத்து நிலையின் சாரம் எனலாம். இக்கருத்து நிலை நெடுங்காலமாகக் கேள்விக்கு இடமாக்கப் படவில்லை. ஆனால் நவீஅன் சமூகத்தில் பெண்களும் கல்வி அறிவு பெற்று சமூக வாழ்க்கையில் முக்கிய இடம் பெறத் தொடங்கியதும் பெண்களின் இருத்தலுக்கும் இந்தக் கருத்து நிலைக்கும் இடையே முரண்பாடு தோன்றத் தொடங்கியது. இந்த முரண்பாட்டின் அடிப்படைய்ல் பெண்களின் தனித்துவம், பெண்விடுதலை பற்றிய உணர்வும் பெண்நிலைவாதச் சிந்தனைகளும் தோன்றின. பெண் எவ்வகையிலும் ஆணுக்குத் தாழ்ந்தவள் அல்ல; அவனுக்கு அடிமைப்பட்டவள் அல்ல; சொந்த விருப்பு வெறுப்புகள் உள்ள, சுயமான வளர்ச்சிக்கு ய்ரிமை உள்ள ஒரு சுதந்திர உயிரி என்பது இச்சிந்தனைகளின் சாராம்சம் எனலாம். 'ஆணுக்கு இன்பம் தருபவளே பெண்' என்ற பெண்பற்றிய பாலியல் படிமத்தை இந்த நவீன சிந்தனை நிராகரிக்கின்றது; எல்லாத் துறைகளிலும் பெண்ணும் ஆணுக்குச் சமாந்தரமாக சுயேச்சையாக வளர்ச்சியடைவதை வேண்டி நிற்கிறது. இக்கருத்து நிலையின் வெளிப்பாடுகளை சுல்பிகாவின் பல கவிதைகளில் காணலாம். 'பெண் ஒரு பாலியல் பிண்டம் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தின் உயிர்ப்பே அவளுள் உறைந்து கிடக்கின்றது' என 'திரைகளின் பின்னால்' என்ற கவிதை உரத்துக் கூறுகிறது.
இறந்தவர் அல்லர் நாம்
இதயம் துடிக்கும் ஏழைப் பெண்கள்
மண்ணின் குழந்தைகள்
மானிடப் பெண்கள் நாம்
இனியும் சகியோம்
இருளின் ஆட்சியை
எதற்கும் அஞ்சோம் துன்பம் ஏற்றிடோம்
துயர்மிகக் கொள்ளோம்
வென்று இவ்வுலகில் நிலைத்திட வந்தோம்
இன்று பிறந்தோம்
இன்று பிறந்தோம்
வென்று வாழ்ந்திட
இன்று பிறந்தோம்
சுல்பிகாவின் இவ்வரிகள் பெண்களின் எழுச்சிக் குரலாகவே ஒலிக்கின்றன.
இவ்வுலகில் தீயனவெல்லாம்
செயலிழக்கச் செய்வேன்
தோல்வி என்னைத்
தோற்கடிக்க முடியாது
தேவைகள் எதுவரினும்
தேறிநான் செல்வேன்
இவ்வாழ்வை வெல்வேன்
என்ற கவிஞரின் பிரகடனம் பெண்குலத்தின் பிரகடனமாக மட்டுமன்றி முழு மனித குலத்தின் பிரகடனமாகவும் அமைகின்றது. இந்த நம்பிக்கைக் குரல் இருள்மண்டிய இன்றையச் சூழலில் நமக்கு ஆறுதல் தரும் குரலாகும்.
இது கவிஞரின் முதல் தொகுப்பு. கவித்துவ முதிர்ச்சி அவருக்கு இன்னும் கைவர வேண்டும். வார்த்தையில் கூர்மையும், கவித்துவச் செழுமையும் இன்னும் அகன்ற உலகப் பார்வையும் கொண்டு கவிதை உலகில் நிலைபெற கவிஞருக்கு என் வாழ்த்துக்கள்.
எம். எ. நுஃமான்
பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை, இலங்கை.
18.2.94
0 comments:
Post a Comment