Monday, March 02, 2009

பெண்ணெனும் இரண்டாமினம் - சிமோன் தெ பொவார்


முன்னுரை

வெகு நாட்களாகவே, ‘பெண்களைக்’ குறித்து புத்தகமொன்று எழுத நினைத்து, தயங்கினேன். முதலாவதாக, ‘பெண்கள்’ என்ற தலைப்பு பலரையும் முகஞ்சுளிக்கக் வைக்கிறது. குறிப்பாக நமது பெண்களை பெண்ணியக்கத்தின் சண்டைகளை எழுத குடங்குடமாய் மையைக் கொட்டி அலுத்து, இனி வேண்டாமென்று ஒதுங்கியபோதிலும், நம்மை விடமாட்டேனென்கிறது. கடந்த நூற்றாண்டு முழுக்க ஏதேதோ நிறைய விவாதித்தாயிற்று, எனினும் பிரச்சினைகள் சரியாக அடையாளப்படுத்தப் பட்டிருக்குமா என்றால், இல்லையென்றுதான் சொல்லவேண்டும். சிலர் கேட்பதுபோல பெண்களுக்குப் பிரச்சினையென்று ஒன்றிருக்கிறதா? ஆமென்றால், என்ன பிரச்சினை? பிரச்சினைக்குப் போவதற்கு முன்னால், ‘பெண்கள்’ என்கிற இனமொன்று இருக்கிறதென்கிற உணர்வாவது இருக்கிறதா? பாரம்பரிய பெண்ணிய அடையாளங் களும் அவற்றுடைய விசுவாசிகளை நம்பியிருக்க அவர்களது முணுமுணுப்பும் காதில் விழுகிறது. ‘சோவியத் ரஷ்யாவிலும் பெண்கள், பெண்களாகத் தானிருக்கிறார்கள்’ என்கிறார்கள் ஓரளவு விடய ஞானமுள்ளவர்கள்.

சில வேளைகளில், முந்தையக் கூட்டமே அலுப்புடன்: பெண்கள் தங்கள் அடையாளத்தை இழந்துவருகிறார்களென்றும், சொல்லப்போனால், ‘பெண்களென்று சொல்லிக் கொள்ளும்வகையில் யாருமில்லை’ யெனவும் சொல்லி வருகிறார்கள். பெண்கள் இருப்பே கேள்விக்குரியதாகியிருக்கிறது. விரும்பியோ விரும்பாமலோ பெண்களிருப்பை அங்கீகரிப்பதாகவே வைத்துக்கொண்டாலும், பெண்கள் தங்களைச் சமுதாயத்தில் எங்கே நிறுத்த விரும்புகிறார்கள்? அல்லது சமுதாயம் அவர்களை எங்கே நிறுத்த விரும்புகிறது? என்பதற்கான பதில்கள் நமக்குத் தெரியவேண்டும். ‘பெண்கள் எங்கே?’ எனச் சமீபத்தில் சஞ்சிகையொன்று தனது இதழில் கேட்டிருந்தது. ‘பெண்கள் எங்கேயென’ கேட்பதிருக்கட்டும், முதலில் ‘பெண்’ என்பவள் யார்? என்ற கேள்விக்கு, ‘Tota mulier in utero’ அதாவது அவளொரு கருப்பை அல்லது சூற்பையென பதில் வருகிறது. எனினும், இவர்கள் தீர்மானித்திருந்த பெண்களின் கருப்பைத் தகுதியை மறந்தவர்களாக, சில பெண்களைப் பார்த்து, ‘இவர்களெல்லாம் பெண்களா? எனக் கேட்கிறார்கள்.

மானுடமென்பது, பெண்ணினமும் சேர்ந்ததுதானென்பது, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை; இன்றைக்கும், கடந்தகாலங்களை போலவே, மனிதரெண்ணிக்கையில் ஏறத்தாழ சமபாதியாக பெண்ணினமிருக்கிறது. இந்த நிலையில், ‘பெண்மைக்கு (feminity) ஆபத்தெனச் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். நம்மிடத்தில், ‘பெண்களாய் இருங்கள், பெண்களாய் நடந்துகொள்ளுங்கள், பெண்களாய் மாறப்பாருங்கள்’ என வற்புறுத்துகிறார்கள். ஆக பெண்ணாய்ப் பிறந்தவர்களனை வரும் ‘பெண்ணாக வாழமுடியுமென்கிற சாத்தியமில்லையென்றாகிறது. சமூகத்தில் அவள் தனது ‘பெண்மை’யை நிரூபிப்பதென்பதென்னும், பயமுறுத்தும் யதார்த்தமொன்றிருக்கிறது. அதனை நிறைவேற்றவேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்குண்டு. கருப்பையில் உற்பத்தியாகிற சினைமுட்டைகளாலோ, பிளாட்டோவுடைய சிந்தனைகளில் ஒன்றாக முடங்கிக்கிடந்தோ, சலசலக்கும் பாவாடைக் கட்டிக்கொண்டு பூமியில் அவதார மெடுத்தோ - ஏதோவொரு வழிமுறையால் அதை நிரூபிக்கலாம். சில பெண்கள் அவ்வுண்மையைப் புரிந்துகொண்டு மிகுந்த பிரயாசையுடன் அதைச் செயல்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால் இதுநாள்வரை, இது தான் வழிமுறையென்று திட்டவட்டமாக எவரும் அறிவிக்கவில்லை. ஒரு சிலர் ‘பெண்மை’ என்பதை தெளிவேதுமற்ற ஆரூட சொற்களில் விளக்க முற்படுகிறார்கள். புனித தோமையார் காலத்தில் ‘பெண்மை’ போதை பொருளாகக் கருதப்பட்ட வேடிக்கையுமுண்டு.

இன்றைக்கு, கருதுகோள்கள் தங்கள் செல்வாக்கினை இழந்திருக்கின்றன. பெண்களுக்கு மாத்திரமல்ல, யூத, நீக்ரோ இனத்தவருக்குங்கூட பண்புகள் என்றென்றும் நிரந்தரமானவை அல்ல என்பதில் உயிரியலும், சமூகவியலும் ஒத்துபோயின. சூழல்களே ஓரினத்தின் பண்புகளைத் தீர்மானிப்ப தாக அறிவியல் திடமாக நம்பியது. எதிர்காலத்தில் ‘பெண்மை’யென்ற சொல் இருப்பதற்றதெனில் கடந்தகாலத்திலும் அது இருப்பற்றதாகவே இருந்திருக்க வேண்டும். அப்படியெனில் ‘பெண்’ என்ற சொல்லுக்கு இதுதான் நேரிடை பொருள் என்று சுட்டமுடியாது? இதைத்தான் பகுத்தறிவு வாதமும் (le rationalisme), பொய்யிருப்புவாதமும் (le nominalism), பிரம்மஞான நெறிகளும் (la philosophile des lunieres) உறுதிபடுத்துகின்றன. அவர்களுக்குப் மனிதரினத்தில் ‘பெண்’ணும் ஒன்று அவ்வளவுதான். அதற்குமேல் பொருள்கொள்ள அச்சொல்லில் ஒன்றுமில்லையென்பது அவர்களது தீர்மானம்.

அநேக அமெரிக்க பெண்களுக்கு வழக்கமான பெண்கள் வரிசையில் தங்களை நிறுத்திக்கொள்ள விருப்பமில்லை. எந்தப் பெண்ணாகிலும் தன்னைப் மீண்டும் பழமையில் வைத்துப் பார்க்க விரும்பினால், அந்த நினைப்பிலிருந்து அவள் விடுபடுவது அவசியமென்று போதிக்கிறார்கள். Modern women-The Last Sex, என்ற நூலில் உறுத்தும் சில விடயங்களுண்டு. ‘பெண்ணைப் பெண்ணாக அடையாளப்படுத்தப்படும் புத்தகங்களில் வருகிற பெண்ணாக இருக்க என்னால் முடியாது. மாறாக நாம் ஆணோ பெண்ணோ யாராகயிருந்தாலும் மனிதர்களாகக் கருதப்பட வேண்டும்’ என்கிறார் டொராத்தி பார்க்கர் (Dorothy Parker). ஆனால் பொய்யிருப்பு வாதமென்பதும் ஓர் முடிவான தரவு அல்ல என்பதால், ஆணாதிக்கவாதிகளால் ‘பெண்கள்’ ஒரு போதும் ஆண்களாக முடியாதெனச் சுலபமாகச் சொல்ல முடிகிறது. ஆண்களைப் போலவே பெண்களும் மனிதரினத்தின் ஓரங்கமென மேம்போக்காய் சொல்வதில் எந்தப் பொருளு மில்லை. உண்மையில் மானுடவியலில் ஆணோ, பெண்ணோ கூட்டமல்ல.

தனியொருவன் அல்லது தனியொருத்தி, காலங் காலமாய் தொடரும் பெண்ணின் பிற்போக்குத் தனத்தையும், கருப்பர் மற்றும் யூதர்களின் அடையாளத்தையும் மறுப்பதென்பது நிகழ் காலத்தில் இவர்கள் மூவரின் இருப்பையும் மறுப்பதாகாது. அன்றியும் இம்மறுப்பு, சம்பந்தப்பட்டவர்களின் விடுதலைக்கு உதவாததோடு, உண்மையைக் கண்டு ஒளியும் தன்மையது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர், பிரபல பெண் எழுத்தாளரொருவர், பெண் எழுத்தாளர்கள் வரிசையில் தனது புகைபடமும் இடம்பெறுவதை விரும்பாத நிலையில், தனது கணவர் செல்வாக் கினைக்கொண்டு ஆண்கள் வரிசையில் பிரசுரிக்க வைத்தார். தங்களை ஆணென்று சொல்லிக் கொள்ளும் பெண்கள், தங்களை ஆண்களுக்கு நிகராகவும், அதே மரியாதையுடனும் எதிர்பார்ப்பது தான் விந்தை. இளம் ட்ராஸ்கிய (Trotskyste)1 பெண்ணொருத்தி, சந்தடியான மாநாடொன்றில், கையை மடக்கிக்கொண்டு, விவாதித்தது நினைவுக்கு வருகிறது. இத்தனைக்கும் அவள் பலவீனமான வளென்பது பார்த்த மாத்திரத்தில் புரிந்தது.

பெண்ணின் பலவீனத்தை மறுக்கும் அதே தருணத்தில் ஓர் ஆண் தொண்டனுக்கு நிகராகக் தன்னை அவள் கற்பிதம் செய்துகொண்டிருந்தாள். பெரும்பாலான அமெரிக்கப் பெண்களின் எதிர்நடவடிக்கைக்களுக்கு அடிப்படைக் காரணம், ‘பெண்மை’ கருத்தியல் ஏற்படுத்திய மனவுளைச்சல். ஆக மனித சமுதாயம் உடை, உடல், முகம், புன்னகை, மகிழ்ச்சி, ஆர்வம் தொழிலென ஒவ்வொன்றிலும் இரண்டுப்பட்டு நிற்பதை அறிவதற்காக நாம் ஒரு கண்ணைமாத்திரம் திறந்து வைத்துக்கொண்டு நடந்தால்கூட போதுமானது. எதிர்காலத்தில் இவ்வேற்றுமைகள் அற்று விடுமென்கிற நிலையில், இவைகளை சற்று மிகையானவை என நம்மால் சித்தரிக்க முடியும். ஆனாலும் இன்றைய தேதியில் இவைகள் நிதர்சனமான உண்மைகள் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆக ‘பால்’ அடிப்படையிலான செயல் பாடுகளால் ‘ஒரு பெண்ணை’ தீர்மானிக்க முடியாதநிலை. அவ்வாறே ‘பாரம்பரியப் பெண்ணுக்குரிய’ இலக்கணந்தான் என்ன என்பதிலும் நமக்கு உடன்பாடில்லை. அதற்காக நம்மை பெண்ணென்று பிறர் அழைப்பதை கூடாதென்றா சொல்ல முடியும். குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது (வேறு வழி, பூமியில் பெண்களென்கிற ஒருவகைப்பாடிருக்கிறதே) ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சரி, பெண் ணென்பவள் யார்? என்ற கேள்விக்கு, நமது பதிலென்ன?

இக்கேள்வி எழுப்பிய மறுகணமே முதற்கட்டமாக ஒரு பதிலை என்னால் அனுமானிக்க முடிகிறது. ஒருவேளை கேள்வியைக் கேட்பது நானென்கிற உண்மை தரும் முக்கியத்துவமாகவிருக்கலாம். மனிதரினத்தில் இப்படியொரு குழப்பமான நிலையில் வைத்து ‘ஆணிணத்தைப்’ பற்றிய நூலொன்றினை எழுத ஓர் ஆணுக்குச் சாத்திய மில்லை2. மாறாக, என்னைப் பற்றியே ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால்கூட ‘நானொரு பெண்’ என்றே தொடங்க வேண்டிருக்கிறது. பிறகு அதனடிப்படையிலேயே மற்ற உண்மைகளைக் கட்டியெழுப்ப வேண்டும். ஓர் ஆண், பாலின அடிப்படையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளாத போதும், அவனொரு ஆணென்பது சொல்லாமலே விளங்கும். பிறப்பு இறப்பு பதிவேடுகளிலும், இதர அடையாள அட்டைகளிலும் ‘ஆண், பெண்’ என எழுதுவதுகூட ஒரு வகைச் சம்பிரதாய வகைப்பாடு. அவ்வளவுதான். இருபாலருக்குமான பந்தத்தை மின்சாரத்தின் இருதுருவங்களோடு ஒப்பிடவியலாது.

நேர்மின் விளைவுக்கும் (Positve) நியூட்ரலுக்கும் (Neutral) இணையாக ‘மனிதன்’ என்ற சொல்லை - அது ‘ஆண்’ இனத்தின் அடையாளமாகயிருப்பினும் - மானுடவர்க்கத்தின் ஏகப்பிரதிநிதியாக நடத்து கிறோம். மாறாக ‘பெண்’ என்ற சொல் எதிர்மின் விளைவு (Negative) தகுதியை மட்டுமே பெற்று, அதன் புரிதல் வரம்பும் மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. பொருளற்ற விவாதங்களுக்கிடையே ஆணொருவன் ‘உன்னால் அப்படியான முடிவுக்குத்தான் வரமுடியும். காரணம் நீயொரு பெண்’ எனச் சொல்வதைக் கேட்டு எங்களுக்கும் அலுத்துவிட்டது. பதிலுக்குப் பெண்ணாக இருப்பதால், எங்கள் தரப்பை நியாயப்படுத்த, பெண் அடையாளத்தை வலிந்து ஒதுக்கிவிட்டு ‘அப்படியொரு முடிவுக்கு வரக்காரணம் எனது தரப்பில் உண்மை இருக்கிறது’ என நாங்கள் சொல்ல வேண்டுமே தவிர மறந்துங்கூட, ‘நீ அப்படியொரு முடிவுக்கு வந்திருக்கிறாய், காரணம் ஆணென்பதால் தானே என்று ஓர் ஆணிடம் கேட்டுவிடக்கூடாது. ஏனெனில் ‘ஆண் அடையாளம்’ பிரத்தியேகமான பண்புக்குக் காரணமாகாது.

ஆணாக இருப்பதாலேயே அவனது சொல்லும் செயலும் சரியானது. பெண்ணாக இருப்பதாலேயே அவளது முடிவுகள் தவறாகத்தான் இருக்கும். பெறப்படும் நீதி, ஆணென்பவன் கடந்தகாலங்களைப் போலவே உயர்ந்தவன், பரிபூரணன். ஆனால் பெண்ணின் நிலைமை வேறு. அவளது உடைமைகளான பெண்குறியும் கருப்பையும் அவளைச் சிறுமைப் படுத்தி சிறைவைக்கும் அடையாளம். இதுதவிர பெண்ணொருத்தின் சிந்தனை, சுரப்பிகள் வயப்பட்டதென்கிற விமர்சனம் வேறு. ஆணுக்கு தனது உடற்கூறியலும் சுரப்பிகள் சார்ந்ததென்பதும், அவனிடத்திலிருக்கும் விந்தகங்களும் (Testicules) சுரப்பிகளாக செயல்படுகின்றன என்பதும் சௌகரியமாக மறந்து போகிறது. சிக்கலற்ற தன்மைகொண்டதாக, உலகோடு நேரிடைத் தொடர்புகொண்டதாக தனது உடலைக் கருதுகிற ஆண், பெண்ணுடலை ஓரு தடையாக, சிறையாக அவளை முடக்கிப் போடவென்றே அமைந்த அசாதாரணமாகக் கருதுகிறான்.

‘ஒரு பெண் பெண்ணாக இருப்பதென்பது தரத்தில் குறைபாடுடையவளாக அவள் இருப்பதைச் சார்ந்தது’, சொன்னது அரிஸ்டாடில். ‘குறைகளுடன் உழலவே ஒரு பெண் இயற்கையில் படைக்கப் பட்டிருப்பதாகக் கருத வேண்டுமென்றும் அவர் கூறுகிறார். அடுத்து, புனித தோமையார் அவர் பங்கிற்கு ‘பெண் என்பவள், குறைபாடுடைய ஓர் ஆண். அவள் படைப்பே ஓர் விபத்து, எதிர்பாராதது’ என்கிறார். மனிதரினத் தோற்ற வரலாற்றின்படி ஏவாள், இழுத்து உருவாக்கப்பட்டவள். போஸ்வெ (Bossuer) சொற்களில் எழுதுவதெனில், ‘ஆதாமுடைய அதிகப்படியான எலும்பு ஒன்றினால்’ படைக்கப்பட்டவள்.

ஆக மானுடம் என்பது ஆணுக்கானது. ஆணை விலக்கிவிட்டு பெண்ணில்லையென்பதும், அவள் பிறர்சார்ந்தே இயங்கப் பிறந்தவளென்றும் சொல்கிறார்கள். மிஷெலெ (Michelt) ‘பெண்ணானவள், பிறர் சார்ந்து இயங்குபவள்’ என எழுதுகிறார். பெண்டா (Benda) தன்னுடைய Rapport de Urielல் ஆணின்றி பெண்ணில்லை என்கிறபோது, ஓர் ஆணுடலின் தனித்துவம் விளங்கும்... பெண்ணை ஒதுக்கிவிட்டு, தன்னை வழிநடத்திக் கொள்ள ஓர் ஆணால் முடியுமென’ மிக அழுத்தமாக வலியுறுத்துகிறார். அவள் ஆணால் தீர்மானிக்கப் பட்ட பொருள். அதாவது அவனது புணர்ச்சிக் கென்றே படைக்கப்பட்ட பாலினம் (The sex). அதுவன்றி வேறு உபயோகம் அதற்குண்டென்று அவன் நம்புவதில்லை. ஒரு பெண்ணை அறிய பெண் போதாது. ஆண் வேண்டும். அவளது இருப்பும், முரண்களும் ஆண்வழி அறியப்பட வேண்டியது. அவள் துணைப்பொருள், ஒதுக்கப்படக்கூடியவள். ஆண் பிரதானம், தவிர்க்க முடியாதவன். அவன் கர்த்தா, ஏக நாயகன், பெண்-வேண்டியவல்ல- ‘வேற்றினம்’(The Other).

‘வேற்றினம்’ என்ற சொல் இன்று நேற்று ஏற்பட்டத்தல்ல நமது மனசாட்சியைப் போலவே தொன்றுதொட்டு வழக்கிலிருந்துவரும் சொல். பழங்கால மனிதர்களிடையேயும் புராணக் கதைகளிலுங்கூட இருமை இயல்புகள் (Duality) இருந்து வந்திருக்கின்றன. ஒரு தரப்பில் ‘நான்’ அல்லது ‘நாம்’ எதிர்த் தரப்பில் அந்நியர் அல்லது ‘வேற்றினம்.’ இம்மாதிரியான பிரிவினை சொற்கள், ஆரம்பத்தில் பாலின அடிப்படையிலோ அல்லது பட்டறிவு உண்மைகளாலோ தீர்மானிக்கப் பட்டதல்ல. முதன்முதலில் கிரானெட் (Granet) தனது ‘சீனச்சிந்தனைகள்’ என்ற நூலிலும், துமேஸில் (Dumezil) ‘இந்தியத் துணைக்கண்டம் மற்றும் ரோம்’ என்ற நூலிலும் இதுபற்றி பேசினர். பெண் என்ற தனிமம் (Element) தொடக்கத்தில் ‘வருணா-மித்ரா’, ‘யுரேனஸ்-சேயுஸ், சூரியன்-சந்திரன், இரவு-பகல் போன்ற ஒத்த இணைகளைக் (Paris) காட்டிலும், நல்லது-கெட்டது, அதிர்ஷ்டமான-அதிர்ஷ்டமற்ற சகுனங்கள், வலம்-இடது, கடவுள்-சாத்தான் போன்ற எதிரிணைகளோடுத் தொடர்புடையதென்பது வெளிப்படை மனிதச் சிந்தனையின் அடிப்படை வகைப்பாடாக ‘வேறுவகை’ இருக்கிறது.

ஒரு குழு தனது ‘நாம்’ அமைப்பை உருவாக்கிச் செயல்பட தீர்மானிப்பதற்கு முன்பாக, தனக்கு எதிரான ‘மற்றவர்கள்’ குழுவைத் தீர்மானித்து விடுகிறது. மூன்று பயணிகள் இரயில் பெட்டி யொன்றில் ஒன்றாகப் பயணிக்க நேர்ந்தால் போதும், பிற பயணிகள் பார்வையில் ‘மற்றவர்களாகி’ப் போகிறார்கள். ஒரு சிறு நகரத்திற்கு, வெளியூர்மக்கள் அந்நியர்கள், ஐயத்திற்குரியவர்கள். சொந்த நாட்டில் வசிப்பவர்களுக்கு தங்கள் நாட்டில் வசிக்கிற பிறநாட்டவர் அந்நியர்கள். இனவாதிகளுக்கு யூத மக்கள் வேற்றினம். அமெரிக்க இனவாதிகளுக்கு நீக்ரோ மக்கள் கீழினத்தவர். காலனி ஆதிக்கவாசிகளுக்கு பூர்வக்குடிகள் உள்ளூர்மக்கள். மேட்டுக் குடியினருக்கு ஏழைகள் தாழ்ந்த வகுப்பினர்.

‘உயிரின உறவுகளை போட்டி, மாற்றம், முரண், சீரொருமை போன்ற வேற்றுமை கோர்வைகளாக (தெளிவாகவோ அல்லது தெளிவின்றியோ) மனித பிராயத்தனம் கண்டதற்கான சாட்சிகள், கற்காலம் தொடங்கி இன்றைக்குக் கலாச்சாரம் பண்பாடென்று வளர்ந்து மனித இனத்தின் பாதையெங்கும் விரவிகிடப்பினும் அவை சமூகத்தின் அடிப்படை உண்மைகளை பிரதிபலிப்பதில்லை’ என்பது பூர்வீககுடிகளின் பல்வேறு அமைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட லெவி-ஸ்ட்ரோஸ் (Levi-Strauss) கண்ட முடிவு. நமது மனித சமூகம் மட்டும் சேர்ந்துவாழும் (Mitsein) அதாவது நட்பு அல்லது கூடிவாழ்தல் குணங்கொண்டதாக அமைந்திருக்கு மென்றால், மேற்கண்ட முடிவினை விளங்கிக் கொள்ள அரிதாக இருந்திருக்கும். மாறாக, ஓருணர்வு மற்ற உணர்வுகளை எதிரியாக நடத்துகிறதென்ற ஹெகெல் (Hegel) கூற்றை நினவிற்கொண்டால், லெவி-ஸ்ட்ரோஸ் ஆய்வின் முடிவு நம்மை வியப்பிலாழ்த்தாது. ஒரு பொருளின் அல்லது கர்த்தாவின் (Subject) இருப்பு, பிறவற்றை மறுக்கும் அதன் குணத்தால் தீர்மானிக்கப்படுகிறது - அதாவது அப்பொருள் தனது முக்கியத்தை வலியுறுத்த, மற்றதை (Other), அமுக்கியத்தை (the inessential), கருவியை (Object) மறுத்து செயல்படுகிறது.

அவ்வாறே மற்ற உணர்வுகளும் அதாவது பிற சுய நலங்களும் மேற்குறித்த காரியங்களைத் தங்களுக்காகச் செயல்படுத்த முனைகின்றன. நேற்றுவரை உள்ளூர்க்காரன் என்ற உணர்வோடு வாழ்ந்தவனுக்கு அடுத்த ஊரின் உள்ளூர்காரர்களுக்கு முன்னால் அந்நியப்படுகிற போது அதிர்ச்சி. உண்மையில் யுத்தம், பண்டிகை, வணிகம், ஒப்பந்தம், போட்டிகள் ஊடாக பழங்குடிகளும், நாடுகளும் பல்வேறுதரப்பினரும் ‘பிறர்’ என்ற சொல்லின் உள்ளடக்கத்தை ஒழித்து தனிமனிதன் மற்றும் குழுக்களிடையே பரஸ்பர உறவின் தேவையை உணரவைக்கின்றனர். ஆனாலிந்த பரஸ்பர உறவை, தன்னிடம் தொடர்பற்ற ‘மற்றதாகவும்’ கருதுவதேன்? இப்படியான ஆணாதிக்கத்திற்கு எதிராக பெண்கள் ஏன் அணிதிரளக் கூடாது? எந்தவொரு பொருளுமே தன்னை விரும்பியே பொருளற்றதாக முன்னிருத்துவதில்லை. ‘ஒன்றின்’ முக்கியத்துவத்தைச் சொல்ல எந்த ‘மற்றதும்’ தன்னை விரும்பியே ‘மற்றதாகச்’ சித்தரித்து கொள்வதில்லை. அந்த ‘ஒன்றின்’ இடத்தை ‘மற்றது’ அடைய முடியாதபோது, அது ‘அந்நிய’ அடையாளத்துடன், தாழ்வுறுகிற தென்பதும் உண்மை. ஆனால் பெண்களுக்கு எதனாலிந்த தாழ்வு நிலை?

பெண்களைத் தவிர்த்து மற்றவற்றுள், நீண்ட காலத்திற்கு ஓரினம், பிற இனத்தின் ஆதிக்க சக்தியாக இருக்கமுடிந்திருக்கிறது. இதற்குச் சாதகமான காரணியென்று முதலில் எண்ணிக்கையைக் குறிப்பிடலாம். அதாவது ஒரு குழுவைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கை, மற்ற குழுவினரைக் காட்டிலும் கூடுதலாக இருக்கலாம். விளைவு, பெரும்பான்மையோர் சிறுபான்மையோரை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களை ஒடுக்கி வைக்கிறார்கள். ஆனால் பெண்ணினம் அமெரிக்க கறுப்பர்களைப் போன்றோ யூதர்களைப் போன்றோ சிறுபான்மை இனத்தவரல்லவே. நமது பூமியில் ஆண்களும் பெண்களும் எண்ணிக்கையில் சமமாகத்தானே இருக்கிறார்கள். பின்னர் இன்னொரு வகையுண்டு. அங்கே அனைத்து இனத்தவரும் ஒரு காலத்தில் அவரவர் மண், வாழ்க்கை என சுதந்திரமாக வாழ்ந்தவர்கள் அல்லது ஓரினத்தவர், பிற இனத்தவரை அறியாதவராகவே வாழந்தவர்கள். பின்னர், சரித்திர நிகழ்வுகள் அவர்களது வாழ்க்கையை மாற்றி எழுதின. பலவீனமானவர்கள் பலசாலிகளுக்கு அடங்கிப்போக நேர்ந்தது. சிதறி வாழநேர்ந்த யூதர்கள், அமெரிக்காவில் புகுத்தப்பட்ட கொத்தடிமை முறை, காலனி ஆதிக்கமென கடந்தகாலச் சான்றுகள் ஆதாரமாக உள்ளன.

ஆனால் இந்த உதாரணங்களில் ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மதம், கலாச்சாரம், பாரம்பரியமென குறைந்தப்பட்சம் பழம்பெருமைகள் இருக்கின்றன. இவ்வகையில் பெண்களையும் உழைக்கும் வர்க்கத்தையும் பெபெல் (Bebel) ஒப்புமை படுத்தியிருப்பதை நினைவுகூற வேண்டும். அவரது கருத்துப்படி உழைக்கும் வர்க்கமும் பெண்களைப் போலவே எண்ணிக்கையில் மற்றவர்களைக் காட்டிலும் குறைந்தவர்களுமல்லர், ஒரு தனிக்குழுவாக இயங்கியதுமில்லை என்கிறார். எனினும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிகழ்வுகளின்றியே, இன்றைக்கு ஒரு வர்க்கமாக, ஓரினமாக இவர்களிருவரையும் வரலாறு வகைப்படுத்த முடிந்திருக்கிறது. ஆனால் இங்கேயும் ஓர் கேள்வி எழாமலில்லை. அதாவது பெண்களும் உழைக்கும் வர்க்கமும் ஒன்றெனச் சொல்லமுடியுமா? உழைக்கும் வர்க்கத்தினுடைய அடையாளம் நிரந்திரமில்லை. மாறாக பெண்வர்க்கம் நிரந்தரமானது. அவர்கள் காலகாலமாய் இருந்து வருகிறார்கள். அவர்கள் உடல், பெண்ணென்ற அடையாளத்தைக் கட்டிக் காப்பதற்காக படைக்கப்பட்டதென்பதும் உண்மை.

எனினும் ஆண் சார்ந்த பெண்ணென்ற இன்றைய நிலைக்கு சரித்திர ஆதாரங்கள், கலாச்சார விளைவுகள் என்றெதுவுமில்லாத போது, வானத்திலிருந்து குதித்துவிட்ட தென்றும் அதனைச் சொல்லவியலாத போது, வேற்றினமென்று நடத்தப்படும் பெண்ணிணத்தை ஏன் ஒரு ‘சுயம்பு’வாக ஓர் சுதந்திர இனமாகத் (Absolute) தீர்மானிக்கக்கூடாது. காலத்தால் எழுதப்படும் ஓரினத்தின் தலைவிதியானது, நிரந்தரமானதல்ல. அவை மாற்றி எழுதப்பட்டிருப்பதற்கு ஹைத்தி (Haiti) கறுப்பின மக்களும் பிறரும் சான்றெனச் சொல்கிறபோது, இயற்கையால் தீர்மானிக்கப்பட்ட விதிமுறைகள் மாறுதல்களுக்கு உட்படுவதில்லையென்பதுபோல தோற்றமளித் தாலும் அப்படி அல்லவென்பது சரித்திரம் தரும் உண்மை. பெண் என்பவள் துணைப்பொருளாக இருப்பதும், தன்னால் முதன்மைப் பொருளாக மாறவியலாதென நினைப்பதும், பிறரால் ஊட்டப்பட்டதல்ல, அவளால் தீர்மானிக்கப்பட்டது. உழைக்கும் வர்க்கம் ‘நாம்’ என்று மார்தட்டி சொல்ல முடிகிறது. கறுப்பின மக்களும் அதில் உறுதியாய் இருக்கின்றனர். ‘கர்த்தா’ (Subjects) இடத்திலிருக்கும் வெள்ளையரும், மேட்டுக் குடியினரும் தேவையெனில் தங்களை, மற்றவர்களாக (Others) சித்தரித்துக்கொள்ள தயங்குவதில்லை.

‘பெண்ணியம் சம்மந்தப்பட்ட மாநாடுகள், ஊர்வலங்கள் தவிர்த்து ‘நாம்’ எந்தச் சொல்லை பெண்கள் உபயோகிப்பது என்று நீங்கள் கேட்டதுண்டா? ‘பெண்கள்’ என்ற சொல் ஆண்களிடமிருந்து இரவல்பெற்றது. அதனைக் கொண்டு தங்களை அடையாளப் படுத்திக்கொள்கிற பெண்கள் ஒருபோதும் தங்களைக் ‘கர்த்தாக்களாக’ வரித்துக் கொள்வதில்லை. உழைக்கும் வர்க்கம், ரஷ்யாவில் புரட்சியைக் கண்டது. கறுப்பின மக்கள் ஹைத்தி நாட்டில் வெகுண்டெழுந்தார்கள். இந்தோ-சீனர்கள், இந்தோ-சீனத்திற்காக சண்டை யிட்டிருக்கிறார்கள். ஆனால் பெண்கள் தரப்பில் ஒரு சில சலசலப்புகளைத் தவிர்த்துப் பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை. இம்மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்வதற்கு ஏற்றவகையில் ஒரணியில் நின்று போராட வேண்டும் என்பதான சிந்தனைகள் நமது பெண்களுக்கிடையே இல்லாததின் விளைவு, இதுவரை பெண்கள் ஈட்டியுள்ள சலுகைகள் அனைத்துமே ஆண்களுடைய தயவால் பெறப்பட்ட தாகும். அதாவது பெண்கள் யாசகமாகப் பெற்றார்களே அன்றி, உரிமையோடு எடுத்துக் கொண்டவை அல்ல. அவர்களுக்கென்று (பெண்களுக்கென்று) வரலாறில்லை. கடந்தகாலமில்லை.

மதமில்லை. உழைக்கும் வர்க்கத்தை பொதுவாக ஒன்றுபடுத்தக்கூடிய, செய்யும் தொழிலில் ஒற்றுமை அல்லது அது சார்ந்த நலன்கள் போன்ற காரணிகள் இல்லை. அவ்வாறே அமெரிக்க கருப்பர்கள், யூதர்கள், சேன்-தெனி நகரப்பகுதியில் நெருக்கமாக வசிக்கிற ரெனோ மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் ஆகியோருக்கிடையே காணப்படுகிற, நெருக்கமாக ஓரிடத்தில் வசிக்கும் தன்மை பெண்களிடத்தில் இல்லை. அவர்கள் இருப்பிடம், பணி பொருளாதார நலன்கள், சில நேரங்களில் தாங்கள் அண்டியிருக்கிற ஆண்களின் (கணவன் அல்லது தந்தை) சமூதாயத் தகுதிக்கேற்ப ஒரு சிலர் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ சலுகைகள் பெற்ற போதிலும் ஆண்களின் நிழலில் தங்கள் கூட்டத்தோடு தொடர்பின்றி சிதறுண்டு வாழ்கிறார்கள். மேட்டுக்குடிப் பெண்களின் நட்பும், உறவும் மேட்டுக்குடிப் பெண்களுக்கேயன்றி உழைக்கும் வர்க்க பெண்களல்ல. வெள்ளை இனப்பெண்களுக்கு கருப்பின பெண்கள் கூடாது. உழைக்கும் வர்க்கம் முதலாளிவர்க்கத்தை கொல்லத்துணியக்கூடும். தான் மட்டுமே அணுகுண்டின் ரகசியத்தை தெரிந்திருக்க வேண்டும்.

அதன்மூலம் உலகம் யூதர்மயமாகவோ, கறுப்பர்மயமாகவோ ஆக்கப்பட வேண்டுமென ஒரு யூதயின வெறியனோ அல்லது கருப்பின வெறியனோ கனவுகான முடியும். ஆனால் அத்தகைய கனவுகள் பெண்களுக்குச் சாத்தியமில்லை. அதாவது பெண்ணினம் ஆணினத்தை அழிப்பதென்பது கனவிலும் நடவாது. அடக்குமுறைக்கு எதிராக, பெண்கள் அனைவரையும் ஓரணியில் நிறுத்துவதற்கான, பொதுப்பண்பினை வேறு எதிர்ப்பாளர்களிடமும் நாம் காண இயலாது. ஆண், பெண் பிரிவு உயிரியில் அடிப்படை சார்ந்தது. மனிதவரலாற்றில் எங்கோ எப்போதோ ஏற்பட்ட ஒரு நிகழ்வு அல்ல. துணை என்ற சொல் சார்ந்து, தொடக்ககாலந்தொட்டு ஆண் பேதம் இருப்பதும், அதனின்று பெண்களைத் தனித்துப் பார்க்க இயலாதென்பதம் உண்மை. சதி, பதி என இருவருடைய கூட்டுப்பங்களிப்பின்றி தம்பதி என்ற சொல்லில்லை என்கிறபோது நமது சமூகத்தினை ஆண் பெண் அடிப்படையில் எந்தவகையிலும் பிரிப்பதென்பது ஒருபோதும் நடவாது. ஆக மொத்தத்தில் ஆணின்றி பெண்ணோ பெண்ணின்றி ஆணோ இல்லையென்பது தெளிவாகத் தெரிந்தும் பெண்ணினத்தை மற்றவர்களாக அதாவது அந்நியராகச் ( the other) சித்தரிக்கும் மனப்பாங்கு இங்கே எல்லாவற்றிக்கும் காரணமாகிறது.

மானுட வாழ்க்கையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்களிப்பு இருக்கிறது. எனவே தனித்துச் செயல்படுவதற்கு இருவருக்குமே சாத்தியக்கூறுகள் உண்டென்று நாம் நம்பக்கூடும். ஓம்பல் (Omphale) மீது உற்ற மோகத்தில் ஹெர்க்குலீஸ் அவளுக்கு நூற்பதற்கு உதவியபோது, அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவனை நிரந்தரமாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் அவள் வைத்திருந்திருக்கலாம். எப்படி அவள் தவறினாள்? ஜேசன்(Jason) தனது பிள்ளைகள் மீது கொண்டுள்ள பாசத்தினை வைத்து, மெடியா(Medea) அவனைத் தனது தாசனாக மாற்றியிருக்கலாம். அவ்வாறின்றி அவனைப் பழிவாங்குகிறேனென்று சொந்தப் பிள்ளைகளேயே அவள் கொல்ல முயன்றது அறிவீனமென்கிற மோசமான பழங்கதையொன்றின் புலம்பலையும் நாம் கேட்டிருக்கிறோம்.

ஆண்கள் உடற்பசிக்குத் தங்களை நம்பி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த பெண்கள், சில சமுதாய இலட்சியங்களை அடைவதற்காக, அதைக் கருவியாகப் பயன்படுத்தி ஒன்றுத் திரளுவதாக லிசிஸ்ற்றாட்டா (Lysistrata) இன்பவியல் நாடகத்தில் அரிஸ்டோபான் (Aristophanes) என்கிற கிரேக்கக் கவிஞன் எழுதியிருப்பதெல்லாம், கற்பனைக்கு மட்டுமே சாத்தியம். சாபின் பெண்களை (The sabine Women) ரோமானியர்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக கட்டாயமாகத் தூக்கிச் சென்றபோது, அப்பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்பதைச் சொல்கிற இத்தாலிய பழங்கதை, சம்பந்தப்பட்ட ஆண்கள், அச்சம்பவத்தின்போது சாபின் பெண்களை தோல் பட்டையால் அடித்ததையும் நியாயப்படுத்திப் பேசுகிறது.

ஆண்கள் தங்கள் உயிரியல் தேவைகளுக்காக அதாவது தங்கள் உடற் தேவைகளுக்கும், வம்ச விருத்திக்கும் பெண்களைச் சார்ந்து இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருப்பினும், சமுதாய அளவில் பெண்களுக்கு அதனாற் சாதகமான பலன்களென்று ஏதுமில்லை. அவ்வாறே பொருளாதார அடிப்படையிலான பிரதிபலனை எதிர்ப்பார்த்து, இணைந்திருக்கிற முதலாளிகள்-அடிமைகள் பந்ததிலும், பின்னவர்களான அடிமைகள் விடுபட வாய்ப்பில்லை. இது எதனாலெனில் அடிமைகள் தேவை தமக்கு அவசிய மற்றதுபோல வெளியிற்காட்டிக் கொண்டாலும், அதிகாரத்தினைக்கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் தந்திரத்தினை முதலாளிகள் அறிந்திருந்தனர். முதலாளிகளைச் சார்ந்திருக்கும் அடிமைகளும், எஜமானர்களிடம் தங்களுக்குள்ள தேவையென்ன என்பதை, அவர்களுடைய எதிர்பார்ப்பு மற்றும் அச்சத்தின் காரணமாக தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். அடிப்படையில் இருவருக்குமே உடனடியாகத் தங்கள் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். எனினும் உண்மையில் நடப்பது என்ன. ஒடுக்கப்பட்டவனைவிட, அவனை அடக்கி வேலை வாங்குகிறவனுக்குச் சாதகமாகவே அனைத்தும் நடக்கின்றன. அதன் காரணமாகவே தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்கு நீண்ட காலம் பிடித்திருக்கிறது.

இன்றைக்கும் பெண் என்பவள் ஆண்சார்ந்தவள் அல்லது ஆணின் அடிமை என்று கூறலாம். ஆணுக்கும் பெண்ணுக்கும் உலகில் சம உரிமை இல்லை என்பதுதான் உண்மை. அவளுடைய நிலமையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிற போதிலும், இன்றைக்கும் அவள் பல விடயங்களில் வாய்ப்புகளின்றி முடங்கிக்கிடக்கிறாள். உலகில் எந்தவொரு நாட்டிலும் ஆணையும் பெண்ணையும் சமமாய் பாவிக்கிற சட்டங்களில்லை. சொல்லப் போனால் அவை பெரும்பாலும் பெண்களுக்குப் பாதகத்தை இழைக்கும் தன்மையன. தொன்று தொட்டு சமுதாயத்தில் நிலவிவரும் மனப்பாங்குகள், தெளிவாக பெண்களின் உரிமையை வரையறுக்க உதவுவதில்லை. விளைவு அவை ஏட்டளவில் பிரசுரிக்கப்படுவதோடு சரி. பொருளியல் உலகிற்கு வருவோம். இருவரும் வெவ்வேறு பிரிவினரெனினும் உரிமைகளில் சமபங்கினர்.

ஆனால் இங்கே என்ன நடக்கிறது. ஈடானத் தகுதிகளுடன் பெண்கள் போட்டியிடுகிற போதும் உயர்வானப் பணிகள், கூடுதலான ஊதியம், உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்புகள். சலுகைகள் என அனைத்துமே ஆண்களுக்கானது. அரசியலாகட்டும், தொழிற் சாலைகளாகட்டும். அதிக எண்ணிக்கையில் இருக்கிறவர்களும் உயர்ந்த பதவிகளை வகிப்பவர் களும் ஆண்களே. தவிர ஆண்வர்க்கத்திற்கே உரிய அதிகாரத்துடன், செல்வாக்கும் இணைந்து கொள்ள, நமது பிள்ளைகளின் கல்விக் கொள்கைகளில் விழிப்புணர்வுகள் இல்லை. நமது கடந்தகாலம் என்பது ஆண்களால் தீர்மானிக்கப்பட்டது. அக்கூறுகளைத்தான், புதியவை என்ற பேரிலே இன்றைய காலகட்டத்திலும் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். உலகின் முன்னேற்றத்திற்குத் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள பெண்கள் முனையும் இத்தருணத்திலும், இவ்வுலகம் தங்களுக்கானதென்பதில் ஆண்கள் உறுதியாய் இருக்க, பெண்களும் அதை மறுப்பதில்லை. ‘உங்கள் நடவடிக்கைகளுக்கு இனி துணை நிற்பதில்லை என்றோ உங்களுக்கு எங்களுக்கும் ஒத்துவரா தென்றோ’ பெண்ணொருத்தி சொல்லத் துணிந்தால் நாளைக்கு அவள் தனது மேலான துணையுடன் இணைந்து பெறக்கூடிய நன்மைகளை இழக்க வேண்டிவரும்.

எசமானன் ஆகிய ஆண், தனது அடிமை ஆகிய பெண்ணுக்கு வேண்டிய பொருட்களைத் தந்து அவளது உயிர்வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கிறான். இவ்வாழ்வாதாரத்தை நம்பி அவளும், தனக்குள்ள பொருளாதார அபாயத்திலிருந்தும், சுதந்திரமென்ற பேரில் அபௌதிக இன்னல்களுக்கான வீண் கனவுகளிலிருந்தும் விடுபட நினைக்கிறாள். ஆணோ பெண்ணோ நம் ஒவ்வவொருவரும் ‘கர்த்தாவாக’ நம்மை நிலைநிறுத்திக்கொள்ள தார்மீக உரிமையுண்டென்று நினைக்கிறோம். அதே நேரத்தில் சுதந்திரமென்ற சொல்லில் ஈர்க்கப்பட்டு அவதிப்படுவதைவிட, பிறர் கட்டுப்பாட்டின் கீழ் வாழமுடிந்தால் போதுமென்றும் விரும்புகிறோம். இதொரு பாவப்பட்டச் சாலை. பயணிப்பவர் - அடிமை, கருவி, பறிகொடுத்தல் ஆகிய சொற்களை புரிந்து நடக்கவும், அடுத்தவர் மனமறிந்து சேவகம் செய்யவும், தமது மேன்மையை ஒளிக்கவும், தகுதியைத் தாரைவார்க்கவும் தெரிந்தவர். ஆனால், பயணிப்பவர் தமது இருப்புக்கான செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் உள்ள சங்கடங்களையும் உள நெருக்கடிகளையும் தவிர்க்க முடியும் என்பதால் ஒருவகையில் எளிதான சாலை.

ஓர் ஆணுக்கு, அவன் காரியம் யாவிலும் உளமார கேள்வியின்றி கைகொடுப்பதற்கு ஓர் கருவி தேவை. அதற்குப் பெண் பொருத்தமானவள் என்பது அவனது முடிவு. பெண்ணுக்கும் தான் கருவியாக இருப்பதில் பெரும்பாலும் மகிழ்ச்சி. ஏனெனில் அவளிடத்தில் தன்னை கர்த்தாவாக நிலைநிறுத்திக்கொள்ள வலிமையான ஆதாரங்களில்லை. தவிர பரஸ்பர எதிர்பார்ப்பற்ற துணையென்ற அனுபவமும் அத்தகைய நிலைபாட்டின் அவசியத்தை அவளுக்கு உணர்த்தி இருக்கிறது.

இத்தருணத்தில் நம்முன் எழும் கேள்வி. இத்தனைச் சிக்கலுக்கும் ஆரம்பம் எது? அனைத்து இருமை இயல்புகளையும் (Durality) போலவே ஆண், பெண் என்ற இருமை இயல்பும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற பிணக்குகளுக்குக் காரணமென்று மொக்கையாகச் சொல்லிவிடலாம். ஐய்யமின்றி வழக்கம்போல, இருவரில் வெற்றிபெறுகிறவன் அதாவது தனது வன்மையை நிரூபிப்பவன், முழுமுதற்கடவுள், வரம்புகளற்ற பெருமான். இதுவரை நமக்குப் புரிகிறது. அடுத்து வருவோம். அதெப்படி வரலாற்றின் தொடக்கத்திலிருந்து ஆண்கள் மட்டுமே வெற்றிபெற்று பவனிவர முடிந்திருக்கிறது? இவ்விருமை யுத்தங்களின் முடிவில் பெண்களும் வாகைசூடி இருக்கலாம். அல்லது வெற்றி தோல்வி எவர்பக்கம் என தீர்மானிக்கவியலாத சூழ்நிலையும் இருந்திருக்கலாம். இல்லையென சொல்லமுடியுமா? இதுவரை ஆண்களுக்கான உலகமாக இருந்து இன்றைக்கு மாற்றத்திற்கு உட்படுகிறதென்பது எப்படி? இந்த மாற்றத்தினால் நன்மைகள் ஏதேனும் உண்டா? வருங்கால உலகம் ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் உரியது என்கிற நிலை வருமா?

இப்படியான கேள்விகள் கேட்கப்படுவது இதுதான் முதன்முறை என்று அல்ல. அதற்கான பதிலும் ஏராளமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் பெண்ணை வேறு (The Other) என தீர்மானமாகக் ஆண் கருதியதால், எப்படி நியாயப்படுத்தப்பட்டிருப்பினும் சொல்லப்பட்ட பதில்களால் நாம் நிறைவை அடைந்ததில்லை. அப்பதில்கள் ஆண்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஆண்களால் ஒப்பிக்கப்பட்டவை என்பதும் உண்மை. ‘பெண்களை’க் குறித்து ஆண்கள் வழங்கிய தீர்ப்புகள் அனைத்துமே நம்பகத்தன்மை அற்றவை. ஏனெனில் அங்கே நீதிபதி வழக்கறிஞர்கள், வாதி, பிரதிவாதிகள், சாட்சிகள் அனைவருமே ஆண்கள். கூறியவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிகம் அறியப்படாதப் பெண்ணியல்வாதியான பூலென் தெ லா பார் (Poulain de la Barre). தங்களைப் படைப்புக்கடவுளாக ஆண்கள் சித்தரித்துக்கொண்டு ஆண்கள் மகிழ்வதை தொன்றுத் தொட்டு உலகமெங்கும் பார்த்து வருகிறோம். ‘தெய்வச்செயல், அவன் என்னைப் பெண்ணாய்ப் படைக்கவில்லை”. என காலைப் பிரார்த்தனையில் யூதர்கள் கடவுளைச் சிலாகிக்க அவர்களது மனைவியரோ மற்றொரு பக்கம், ஆண்டவன் அருள் அவனது விருப்பத்திற் கிணங்க என்னைப் படைத்தான்’ எனப் பணிவுடன் பெருமிதம் அடைவார்கள்.

‘தன்னை அடிமையாக அல்லாமல் சுதந்திர மனிதனாக பிறக்கவைத்ததற்காக முதலாவதாகவும், தன்னை பெண்ணகாக அல்லாமல் ஓர் ஆணாக பிறக்கவைத்தமைக்காக இரண்டாவதாகவும்’, பிளாட்டோ, இறைவனிடம் தனது நன்றியைத் தெரிவித்தான். ஆக கடவுள் தந்த இவ்வரத்தினை முழுமையாக ஆண்கள் அனுபவிக்க வேண்டுமெனில், ஒன்று அவர்களின் நிரந்தரச் சொத்து என்கிற தகுதியைப் பெற்றாக வேண்டும். இரண்டாவது அதற்குக் குறைகளேதும் நேர்ந்திடக் கூடாது. இந்த ஆதிக்க உண்மை அவர்களது உரிமையைத் தேடிபெற உதவிற்று. ‘இங்கே சட்டங்களை இயற்றியவர்களும், வடிவமைத்தவர்களும் சரி பின்னர் அவற்றை கோட்பாடுகளாக மாற்றி அமைத்த சட்ட நிபுணர்களும் சரி ஆண்கள். எனவே அவை அனைத்துமே ஆண்களுக்கு அனுகூலமாக இருக்கின்றன’ இதைக் கூறியவரும் பூலென் தெ லா பார் என்பவரே.

பெண்களின் சார்நிலை பூமியின் நலனுக்காக, விண்ணில் தீர்மானிக்கப்பட்டது என்பதை வலியுறுத்த, நமது மக்கள் பிரதிநிதிகளும், மத குருமார்களும், தத்துவஞானிகளும், எழுத்தாளர்களும், விஞ்ஞானிகளும் போராடி இருக்கிறார்கள். ஆண்களுடைய கண்டுபிடிப்புகளான மதங்களும், ஆதிக்க உணர்வில் அவர்களுக்குள்ள நாட்டத்தை வெளிப்படுத்துகின்றன. ஏவ் மற்றும் பண்டோரா புராணகதைகளில் பெண்களுக்கு எதிராக ஆண்கள் ஆயுதம் ஏந்தியதைப் பார்க்கிறோம். அரிஸ்டாடில் மற்றும் புனித தோமையார் மேற்கோள்களையே சமயத் தத்துவத்திலும் மெய்விளக்கவியல் தத்துவத்திலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். பழங்காலந்தொட்டு அங்கதத் கலைஞர்களும் அறவோர்களும் பெண்களின் பலவீனத்தை மேடையேற்றி மகிழ்ந்திருக்கிறார்கள். பெண்களை காட்டுமிராண்டித்தனமாக வசைபாடி மகிழ்வதையே நோக்கமாகக் கொண்டு நமது பிரெஞ்சு இலக்கியங்கள் இருக்கின்றன என்பதை நன்கு அறிவோம்.

மோந்த்தெர்லாந்தின் (Montherland) எழுத்தில் அத்தனை வீரியம் இல்லையென்றாலும், ழான் தெ மேங் (Jean de Meung) ஏற்படுத்திவைத்த மரபினை அவரும் பின்பற்றுகிறார். ஒருசில சமயங்களில் காரணத்தோடும், பெரும்பாலான நேரங்களில் எந்த முகாந்தரமுமின்றியும் உண்மையில் தங்களைக் குறித்த முடிவினைத் தாங்களே எடுக்கும் எண்ணத்தை மறைத்தும் அவர்கள் செயல்படுகின்றனர். பாலினங்களில் குறைகளை மன்னிப்பதைக் காட்டிலும், குற்றஞ்சுமத்துவது சுலபம்.’ என்கிற மோந்தேஜ் (Montaigher) கூற்றை இங்கே நினைவு கூற தக்கது. ஒரு சிலவற்றைத் திட்டமிட்டே ஆண்கள் செயல்படுத்துகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. பெண்களுக்கான உரிமைகளை வரம்புக்கு கொண்டுவருவதற்காக உருவாக்கிய ரோமானியர் சட்டம் ‘பாலினங்களின் பிரச்சினைகளென்று மடமை மற்றும் பலவீனங்களை’ முன்வைக்கிறது.

இக்குணங்களால் இக்கட்டான நேரங்களில் குடும்பத்தின் ஆண்வாரிசுகளுக்கு ஆபத்தென்று அச்சுறுத்தல் வேறு. பதினாறாம் நூற்றாண்டில் மணமானப் பெண்கள் ஆண் களுடைய பாதுகாப்பில் இருக்கவேண்டுமென புனித அகஸ்டினிடம் முறையிட்டவர்கள், அப்பெண் களுக்கு அதாவது மணம் முடித்தப் பெண்களுக்கு, முடிவெடுக்கும் ஆற்றலோ திட சிந்தனையோ இல்லை என்பதை அதற்குக் காரணமாகக் குறிப்பிட்டார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால் திருமணமாகாதப் பெண்கள் தங்கள் உடமை மற்றும் செல்வத்தினை பராமரிக்கும் விடயத்தில் இவர்களுக்கு உடன்பாடிருந்தது. இவைகளையெல்லாம் படிக்கிறபோது நமக்கு அதிர்ச்சி. பெண்கள் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்துமே அநீதியானது, ஒருதலைப்பட்சமானது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட மோந்தேஜேன், ‘தங்களைக் கலந்து ஆலோசிக்காமல் தீர்மானிக்கப்பட்ட விதிகளை மறுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டென்றும், கபடச் செயல்களையும் தெருச்சண்டைகளையும் தங்களிடையே நிகழ்த்திக் கொள்வதற்கான காரணங்கள், இருபாலருக்குமே நிறைய இருக்கின்றன’ என்றும் கூற முற்பட்டபோதிலும் பெண்கள் தங்கள் பிரச்சினைக்களுக்காக முன்நிற்பதுபற்றி வாய்திறக்கவில்லை.

பதினெட்டாம் நூற்றாண்டில் அப்படியான மாற்றத்தை, சனநாயகத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட ஆண்களிடத்தில் முதன்முதலாகச் சந்திக்கிறோம். திதெரோ (Diderot) போன்றவர்கள் பெண்களும் ஆண்களைபோலவே ஓர் மனித உயிர் என்று எழுதத் துணிந்த காலம் அது. பின்னர் ஜான் ஸ்டூவர்ட் மில் (John Stuart Milli) பெண் சார்ந்து பேசினார், எழுதினார் என்ற போதிலும் இவர்கள் போக்கில் ஒரு சார்புநிலை இருந்ததை மறுப்பதற்கில்லை. அடுத்து பத்தொன்பதாம் நூற்றாண்டு - தொழிற்புரட்சியின் காலம் - இங்கே பெண்ணியல் வாதப் பிரதிவாதங்கள், போராட்டங்கள் அனைத்துமே அவரவர் தேவைக்கான செயல்பாடுகளாக இருந்தன. விவசாயம் வீடு என்றிருந்த பெண்களுக்குத் தொழிற்சாலைக் கதவுகள் திறக்கப்படுகின்றன. ஊதியம், வேலைநேரமென்ற பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளைச் சந்தித்ததன் மூலமாக, கொள்கை கோட்பாடென பேச்சளவில் இருந்த பெண்களை, வீதியில் இறக்கிற்று. நில உடமைக் கொள்கைகள் தங்கள் செல்வாக்கினை ஒரு பக்கம் இழந்து கொண்டிருக்க, மேட்டுக்குடியினர், தனிநபர் சொத்துரிமைக்கு உதவும் பழமையான குடும்ப அமைப்பு முறைக்கு மீண்டும் திரும்புகின்றனர்.

எனினும் பெண் விடுதலை என்பது சமுதாயத்தின் அழிவுபாதைக்கானது என பொருள் கொள்ளப்பட்டு அவர்களுக்கான இடம், வீடென்று சொல்லப்பட்டது. பெண் தொழிலாளர்களின் குறைந்த ஊதியமும், கூடுதல் நேரப் பணியும் அவர்களைத் தொழிற் போட்டியாளர்களாக ஆண்கள் கருத உதவிற்று. பெண்கள் ஆண்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் என்பதை மெய்பிக்கும் வகையில் நேற்றுவரை உதவிய சமயம், தத்துவம், சமயக்கோட்பாடுகள் இவற்றோடு புதிதாக, உயிரியல், சோதனைவழி உளவியல் என்ற அறிவியல் கூறுகளைத் துணைசேர்த்துக் கொண்டார்கள். அனைத்திற்கும் மேலாக ‘வேற்றுமையிலும் அனைவரும் சமம்’ என்ற வாக்கியத்தைத் தூக்கிப்பிடித்து தங்கள் இனத்தவரோடு சேராத பிறவற்றோடு பெண்களை நிறுத்த முன்வந்தனர். இக்கொள்கையின் மீதான அக்கறையையும் ஆராய்ந்து பார்க்கவேண்டிய ஒன்று; அமெரிக்க கருப்பின மக்களுக்காக ஜிம் க்ரோ உபயோகித்த வேதவாக்கு. உண்மையில் வேற்றுமைகளிருப்பினும் அனைவரும் சமம் என்ற சொல் மோசமான இனப்பாகுபாட்டிற்கு அங்கே வித்திட்டது.

இந்த ‘வேற்றுமைகளின் அடிப்படையில் அனைவரும் சமம்’ எனக் கருப்பின மக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்ட சொல்லை பெண்களுக்கு எதிராகவும் கையாண்டது ஏதோ தற்செயலாக நிகழ்ந்தது அல்ல. பொதுவாக எந்த இனமாக இருக்கட்டும், சாதியாக இருக்கட்டும், வர்க்கமாக இருக்கட்டும் அல்லது பால் அடிப்படையிலான பிரிவினராக இருக்கட்டும், எவரென்றாலும் அவர்களுள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு வழங்கப்படும் தீர்ப்பில் பேதங்கள் இருப்பதில்லை. பாரம்பரியப் பெண்களாகட்டும், கருப்பின உயிர்களாகட்டும், யூதர்களாட்டும் அனைவரும் சமம். இவர்களுள், யூதர்களை பிறரோடு ஒப்பிடல் முடியாதென்பதும் உண்மை எனினும் அவர்கள் மீதிருந்த இனப்பகையையும் இந்த மண்ணில் வாழ தகுதியற்றவர்கள் என தீர்மானிக்கபட்டு எதிரிகள் அவர்களைப் முற்றிலுமாக அழிக்க நினைத்ததையும் இரண்டாம் பட்சமாக கொள்ள முடியாது. ஆனால் பெண்களுக்கும் கருப்பின மக்களுக்கும் ஆழமான ஒற்றுமைகள் இருக்கின்றன.

இரண்டு இனங்களுமே தங்கள் தந்தைவழி ஆதிக்கத்தினின்று விடுபட முயல, நேற்றுவரை அவர்களது எசமானவர்களாக இருந்தவர்களுக்கு அவர்களை விடுவிக்க விருப்பமில்லை. எப்போதும்போல தங்கள் தயவிலேயே அவர்களை வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணம். அதற்காக இனிக்க இனிக்க புகழ்வார்கள். கருப்பர்களென்றால் நல்ல நீக்ரோ அதாவது சூதுவாது அறியாதவன். விளையாட்டுப்பிள்ளை. உல்லாசி தவிர அடக்கமான கருப்பன். பெண்களென்றால் உத்தமி, அதற்கான தகுதிககளாக அவளிடம் எதிர்பார்ப்பது பேதைமை, விளையாட்டுத்தனம், பொறுப்பற்றவள் அதாவது அடக்கமான பெண்மணி. இதற்கான முடிவுகளை அவர்களுக்கு எடுக்க உதவிய சூழலை உருவாக்கியவர்களும் அவர்களே.

அமெரிக்க வெள்ளையர்கள், கருப்பர்களை காலணி மெருகூட்டும் பையன்கள் தகுதிக்கு உருவாக்கியிருக்கிறார்கள் எனக்கூறியதன் மூலம் ஜாôஜ் பெர்னார் ஷா, கருப்பர்கள் காலணிகள் மெருகு ஊட்ட மட்டுமே தகுதியிடையவர்கள் என்று சொல்கிறார். தாழ்த்தப்பட்டவன் என்ற காரணத்தினாலேயே ஒருவனை அல்லது ஒரு கூட்டத்தை அப்படியான வட்டத்திற்குள்ளேயே நிறுத்துவதென்பது, உலகில் ஒத்த சூழலுள்ள எல்லா இடங்களிலும் உண்மை என்றாகிறது. இங்கே ‘இருப்பு’ என்ற சொல்லை சரியாகப் புரிந்துகொள்ளுதல் அவசியம். அது நிலையானதல்ல. அது மாற்றத்திற்குரியது. ஆம், இன்றைய தேதியில் பெண்கள் பொதுவாகப் ஆண்களினும் பார்க்க தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கைமுறையும் சூழல்களும் சில சாத்தியங்களுக்கு வித்திட்டு இருக்கின்றன. இது தொடரக்கூடுமா? என்பது நமக்குள்ள கேள்வி.

ஆண்களில் அநேகர் அதாவது இருபாலருக்கும் இடையேயான யுத்தத்தில் தோற்காத ஆண்களைத் தவிர்த்து மற்றவர்கள் - தொடரும் என்கின்றனர். பழமையில் நம்பிக்கைக் கொண்ட மேட்டுக்குடி வர்க்கத்தினர் பெண்விடுதலையை தங்கள் நலன்களுக்கும், காலங்காலமாய் பேணிக்காத்த கலாச்சார பண்பிற்கும் ஏற்பட இருக்கும் அபாயமாக கருதுகின்றனர். பெண் போட்டியாளர்களை பலரும் அச்சத்துடன் பார்க்கின்றனர். ‘Hebdo-Latin’ என்ற இதழில், மருத்துவம் அல்லது சட்டம் படிக்கும் பெண்களால் எங்கள் வேலைக்கு ஆபத்தென மாணவன் ஒருவன் எழுதினான். தனது உரிமைகள் குறித்தோ, பொருளாதார பலன்கள் என்பது ஓரினத்தில் சார்பானது அல்ல என்பது குறித்தோ அவன் கேள்வி எழுப்பவில்லை. அடக்கு முறையினால் ஏற்படும் ஒரே நன்மை, அடக்குகிற கூட்டத்திலும் உதாசீனபடுத்தப்பட்டு ஒரு சிலர் இருப்பர். அவர்களிடத்தில் தாங்களும் உயர்ந்தவர்களே என்ற எண்ணத்தை உண்டாக்கும் சாத்தியங்கள் அங்கே ஏற்படுவது உண்டு. தெற்கில் இருக்கும் அமெரிக்க வெள்ளையன் ‘ஊத்தை’யான கருப்பன் நிலை எனக்கில்லை என்று பெருமிதம் கொள்வான். இதை வசதிபடைத்தவன் தந்திரமாக இப்பெருமிதத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறான். அவ்வாறே சராசரி மனிதனும், பெண்ணொருத்தியோடு ஒப்பிட்டுப்பார்த்து, தன்னைக் கடவுள் இடத்தில் வைத்துப் பார்க்கிறான்.

பொதுவாக குடும்பத்தில், குழந்தை பருவத்திலும் இளமைபருவத்திலும் தங்கள்வீட்டுப் பெண் மணியைப் பார்க்கிற ஆண் அவள் வளர்ந்த ஆணைப்போலவே உடுத்தவும், சமுதாயத்தில் உரிய மரியாதையுடனும் அவள் நடத்தப்படுவதாக நினைக்கிறான். அவன் வளர்ந்து இளைஞனாக மாறுகிறபோது தனது காதல் மற்றும் இச்சை அனுபவங்களில் காதலிக்கிற அல்லது இச்சைகொள்கிற பெண்ணின் சுதந்திரம் மற்றும் மறுப்பினை தெரிந்துகொள்ள நேரிடுகிறது. பிறகு ஒருத்தியை திருமணம் செய்துகொள்கிறான். போதுமான அளவிற்கு தனது மனைவியையும் தாயையும் மதிக்கிறான். ஆக தனது குடும்ப வாழ்க்கை மூலம் பெண்கள் ஓரளவு சுதந்திரமானவர்கள் என்கிற முடிவுக்கு வருகிறான்.

அதன்படி இருபாலருக்கும் இடையில் ஏற்றதாழ்வென்று எதுவுமில்லையென்றும் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே ஒருசில வேறுபாடுகள் இருப்பினும், குடும்ப உறவில் இருவரும் சமம் என்பது அவன் முடிவு. எனினும் ஆணுக்கு ஈடாக பெண் உழைப்பதில்லை என்பதை அவதானிக்கிறபோது அவளை அவனுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள மனமின்றி அதற்கு இயற்கையிலேயே பெண்ணின் படைப்பு அப்படி என சமாதானம் செய்துகொள்கிறான். தனது மனைவி இடத்தில் அன்பு செலுத்துகிறவனாகவும் அவள் காரியங்கள் யாவைக்கும் கைகொடுப்பவனாகவும் இருக்கும் ஆண் அவளைச் சமமாகவே நடத்துகிறான். இருவருக்குமிடையேயான ஏற்றதாழ்வுகள் அவன் வரையில் இல்லை. ஆனால் இல்லத்தில் பிரச்சினைகள் என்று வருகிறபோது நிலைமை மாறுகிறது. நீ பாதி நான் பாதி என்பதெல்லாம் உதட்டளவில் என்றாகிறது. ‘ஏக நாயகன் நானே’ என்பதுபோல நடந்துகொள்கிறான். பெண்கள், தங்கள் உரிமைகளுக்கென்று போராடுவது அவசியமற்றது.

அவர்களை ஆண்களுக்கு இணையாகவே நடத்துகிறோம் எனச் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம், ஒருபோதும் ஆணும்பெண்ணும் சமமாக முடியாது. அதற்காக அவர்கள் போராட்டம் ஊர்வலமென்று வெளியில் வருவது வீணான வேலை என்பதே இன்றைய தினத்தில் பெரும்பாலான ஆண்களின் கருத்து. இத்தகைய நெருக்கடிக்கு ஆண்கள் உள்ளாவதற்கான காரணம், அன்றாட வாழ்க்கையில் பெண்களுக்கு இனப்பாகுபாடுகளினால் ஏற்படுகிற பிரச்சினைகளும் விளைவுகளும் வெளிப்படையாக - அத்தனை பூதாகரமானதாகத் தெரிவதில்லை. ஆனால் உண்மையில் பெண்கள், மனம்சார்ந்த, அறிவு சார்ந்த பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். அதைப் பலரும் இயல்பான தென்று எண்ணவும் செய்கிறார்கள். பெண்ணிடம் மிகவும் பரிவாக இருக்கிற ஆண், அவளுக்கான பிரச்சினைகளை ஒருபோதும் அறியமாட்டான். அவ்வாறே தனக்கான சிறப்புரிமைகளைப் பற்றிய போதிய ஞானமுமின்றி போராடிப்பெற நினைக்கும் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கான வேதனைகள், சிக்கல்கள் புரியாது. இனியும் பெண்கள்மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களை நம்மால் அனுமதிக்க முடியாது. ‘உத்தம பெண்’ என்று உருவகப்படுத்தி செய்யப்படும் அர்ச்சனை சொற்களுகோ, இவ்வுலகில் எங்களால் எதையும் விட்டுக்கொடுக்க முடியாது என நினைக்கும் ஆணோடுதான் ஒரு பெண்ணின் வாழ்க்கை எனத் தீர்மானிக்கப்படும் அவலத்திற்கோ தொடர்ந்து நம்மால் உடன்பட முடியாது.

சில தேவையற்ற சிக்கல்கள் எழுவதன் காரணமாக, பெண் விடுதலையினரின் நியாயங்கள் போதிய வரவேற்பைப் பெறுவதில்லை. அதனா லேயே அவர்கள் முன்வைக்கும் வாதங்களையும் அர்த்தமற்றவை என்று ஒதுக்கிவிட முடியாது. ‘பெண்கள் எழுப்பும் கேள்விகள்’ இன்றைக்கு சார மற்றதாக இருக்கிறதென்றால், அதை வெற்று கூச்சலாக ஆண்கள் திரித்து கூறியிருக்கிறார்கள். கூச்சளென்று சொல்கிறபோதே, அவை அர்த்த மற்றதாகிவிடுகின்றன. இதுவரை நடந்திருப்பது என்ன? பெண் உயர்ந்தவளா, தாழ்ந்தவளா, அல்லது நிகரானவளா? என நிரூபிப்பதற்கு முன்னெடுக்கும் முயற்சிகள் அனைத்துமே ஆணை மையமாக வைத்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆதாமிற்கு பிறகு படைக்கப்பட்டவள் பெண் என்பதால், படைப்பில் அவளுக்கான இடம் இரண்டாம் நிலை என்பவர்கள் ஒரு சிலர். மற்றும் சிலர் இல்லை இல்லை, ஆதாம் படைப்பு, கடவுளின் முதல் முயற்சி - அவருக்கு அதில் திருப்தி இல்லை.

எனவே ஏவாளைப் படைத்து நிறைவு பெற்றார். அவளே முழுமை (Perfection). அவளது மூளை சிறியதெனினும் தேவையான அளவிற்கு பெரியதுதான். கிறிஸ்துவைக் கடவுள் பிறகு படைத்ததுகூட முதல்படைப்பு ஒழுங்காக அமையாததால்தான் என்கிறார்கள். இரு தரப்பினருக்குமே நம்மால் மாற்றுக்கருத்துக்களை அளிக்க முடியும். பெரும்பாலான நேரங்களில் இவ்விரு கருத்துக்களுமே அர்த்தமற்றவைகளாக இருக்கின்றன. ஆக பெண்ணைப் பற்றி உண்மையில் புரிந்துகொள்ள முதலில் இதுமாதிரியான சிக்கல்களிலிருந்து நாம் விடுபடவேண்டும். உயர்ந்தவர், தாழ்ந்தவர், சமமானவர் என்ற சொற்களை வைத்துக்கொண்டு தவறான திசையில் விவாதிப்பதை விடுத்து, முற்றிலும் புதிய வகையில் இப்பிரச்சினைக்கான பதிலைத் தேடவேண்டும்.

அப்படியெனில் அதற்கான கேள்வி எது? அக்கேள்வியை எழுப்ப அல்லது கேட்க நாம் யார்? இவ்வழக்கில் விசாரிக்கப்பட வேண்டியவர்களாகவும் நீதிவழங்க வேண்டியவர்களாகவும் ஆண், பெண் இருவருமே உள்ளதால் இருபாலரையுமே பார்வையாளர்களாக மட்டுமே கொள்ள முடியும். ஆக நடுநிலைமை வகிக்கக்கூடிய பொதுவான ஒரு தேவதை வேண்டும். எங்கே போவது? இதில் சாபக்கேடு என்னவெனில் பெண் தேவதைக்குப் பொதுவாக நன்றாகப் பேசவராது. பிரச்சினைகளின் ஆழமும் புரியாது. இருபால் உயிரொன்றை (Hermaphrodite) நாடலாமென்றாலும் வழிகளில்லை. அதாவது இதுவுமில்லை அதுவுமில்லை என்கிற போது ஒன்றுமில்லை என்றாகிறது. எனக்கென்ன தோன்றுகிறதென்றால், இப்பிரச்சினைகளை பெண்களே தீர்த்தால் என்ன? தகுதிபெற்ற பெண்கள் நம்மிடத்தில் இல்லையா என்ன? எபிமெனித் (Epimenide) கதைகளை இங்கே இழுக்காதீர்கள். ஆண்கள் அல்லது பெண்களின் தவறான அல்லது சரியான நம்பிக்கை மற்றும் அதன்மீதான செயல்பாடுகளுக்கு எந்த அதிசயச் சான்றும் பொறுப்பல்ல.

அவரவர் சூழ்நிலைகளே உண்மைகளைத் தேடச் சொல்கின்றன. மானுட வாழ்க்கையின் அனுகூலங்களை எல்லாம் விட்டுக்கொடுத்து, தன்னடக்கத்தோடு இருக்கிற பெண்களை அறிந்த நமக்கு, அதன் தேவை யென்னவென்று புரியாமல் இல்லை. நமது முன்னோர்களைப்போல சண்டைபோட வேண்டிய நிலையிலும் நாம் இல்லை. களத்தில் வெற்றியும் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் நடந்த பெண்களுக்கான விவாதத்தில் பெண்கள் சுதந்திரம் என்பது இன்றைக்கு கனவல்ல உண்மை என அறிவிக்க முடிகிறது. ஏற்கனவே நம்மில் பலரும் பெண்களுக்கான சங்கடங்களையும் தடைகளையும் மறந்து வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். ஒன்றிரண்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுபோக இன்றைக்கு அநேக பிரச்சினைகளை கையில் எடுத்திருக்கிறோம். சரியான பாதையில்தான் செல்கிறோம் என்பதான நம்பிக்கையை இந்த மாற்றம் நமக்கு தந்துள்ளது. தவிர நாம் பெண்வழித் தோன்றல்கள் என்பதால், ஆணைக்காட்டிலும், பெண்கள் உலகத்தைப் பற்றிய ஞானம் நமக்கு அதிகம்.

மானுட வாழ்க்கையில் பெண்ணாய் இருப்பதன் பொருளை நன்கு புரிந்துகொண்டதின் விளைவாக சட்டென்று அதுபற்றி ஒரு ஆணைக்காட்டிலும் நம்மால் விவாதிக்க முடிகிறது. அது தொடர்பான ஞானத்திலும் நமக்கு ஆர்வம். முக்கியமாக பிரச்சினைகள் பற்றி சற்றுமுன்னர் குறிப்பிட்டேன். அப்படிக் குறிப்பிட்டதால் துரிதமாகத் தீர்க்கப்பட வேண்டியவைப் பற்றிய கேள்விகள் கூடாது என்றில்லை. உதாரணமாக, பெண்களாய் பிறந்ததால் நமக்குள்ள அன்றாடப் பிரச்சினைகள் என்ன? நமக்களிக்கப்பட்ட வாய்ப்புகள் எவை? மறுக்கப்பட்டவை எவை? அவைகளில் எவை எவை நமது எதிர்கால இளம் பெண் சகோதரிகளுக்காகக் காத்திருக்கக்கூடியவை? அவர்களை வழிநடத்தி செல்வதற்கான திசைகள் எவை? பெண்களால், பெண்களுக்காக என எழுதப்பட்ட புத்தகங்களைக்கூட பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. நமது உரிமைகளை பேசுவதில் காட்டிய அக்கறையை தெளிவான, பிறருக்கு எளிதில் புரிகிற அளவில் எழுத்திலும் காட்டியிருக்கலாம். நாமிருக்கும் காலம் மிதமிஞ்சிய கருத்து வேறுபாடுகளுக்கானதென்று பலரும் கூறுகிறார்கள். அக்கூற்றை மெய்ப்பிக்கும் முயற்சிகளிலொன்று இப்புத்தகம்.

நடுநிலையுடன் மானுடப் பிரச்சினைகளை சொல்வது இன்றைக்குச் சாத்திமில்லை. சாதகமான கேள்விகள், அனுகூலமானத் தீர்மானங்கள், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் என அனைத்தையும் சிந்தித்து, பண்புகள் அனைத்தையும் விழுமியங்களாக அடையாளப்படுத்துவார்கள். குறிக்கோள்கள் களங்கமற்றவை என விளக்கம் சொல்வார்கள். ஆரம்பத்திலேயே எதற்காக எழுதுகிறேன். அதற்கான நோக்கம் என்ன என்பதைத் தெளிவாக சொல்லிவிடுகிறேன். வீணாக அதை ஒளிப்பதோ வேறுவகையில் அக்கருத்தை வலியுத்துவதோ முறையாகாது. இதனால் உயர்ந்தது, தாழ்ந்தது, சிறந்தது, மோசமானது, முன்னேற்றம், பின்னடைவு என ஒவ்வொன்றிற்கும் பக்கத்திற்குப் பக்கம் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கும் அவசியமும் இல்லை. சஞ்சிகைகளில், பெண்கள் பற்றிய எழுத்துகளை வாசிக்கிறபோதெல்லாம் கண்ணிற்படுகிற மிக முக்கியமான விஷயம் ‘பொது நலம்’, இச்சொல்லை, ஒவ்வொருவரும் விரும்புகிற அல்லது பேணிக்காக்க நினைக்கிற சமுதாய நலம் பற்றியதென்று பிறர் பொருள்கொள்ள, நம்மை பொறுத்தவரையில் பொதுநலம் என்பது ‘தனிநபர் நலத்திற்கு’ உத்தரவாதம் அளிக்கப்படுவது என நினைக்கிறோம்.

பொது அமைப்புகள் மீதான நமது மதிப்பீடு என்பது தனிநபருக்கு நடைமுறை வாழ்க்கையில், அவ்வமைப்புகள் ஏற்படுத்தித் தரக்கூடிய வாய்ப்புகளைப் பொருத்தது. தனிநபர் நலன் எனச் சொல்ல முற்படுகிறபோது மகிழ்ச்சி என்ற சொல்லை அதனுடன் சேர்ந்து நாம் குழப்பிக் கொள்வதில்லை. இங்கேதான் அடிக்கடி மாற்றுக்கருத்துக்கு நாம் உட்படுகிறோம். ஓட்டுரிமை உள்ள பெண்களைக் காட்டிலும் அந்தப்புர பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா இல்லையா? அவ்வாறே வீட்டு வேலைக்காரியைக் காட்டிலும் ஒரு பெண் தொழிலாளி மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கலாம். இந்த மகிழ்ச்சி என்ற சொல்லுக்கு உண்மையான பொருளைச் சொல்வது அரிது. சில நேரங்களில் அதன் விழுமியங்களை மூடிமறைப்பது மேலும் கடினம். அடுத்தவர் மகிழ்ச்சியை அளப்பதற்கான வழிமுறைகளென்று ஏதுமில்லை. ஆனால் அவர்களுக்கு நம்மால் ஏற்படுத்தித் தரப்படும் சூழ்நிலையை மகிழ்ச்சியென விளக்கம் சொல்வோம். ஓரிடத்தில் ஓய்வாய் இருப்பது மகிழ்ச்சி தரக்கூடியதெனில், தேக்கநிலை வாழ்க்கைக்குச் சபிக்கப்பட்டிருப்பதுகூட மகிழ்ச்சி என்றாகிறது.


ஆகவே இம்மாதிரியான சிந்தனைப் போக்கைப் பற்றியப் பொதுவாக எழுதவோ, பேசவோ நாம் விரும்புவதில்லை. நமக்கான திட்டம் நமக்கான பாதையென்று நாம் நினைப்பது நெறியான நியாயமான வாழ்க்கையன்றி வேறல்ல. உயிர்கள் யாவையும் நமது குறிக்கோள்கள் திட்டங்களை முன்வைத்து ஒருவித பரம்பொருள் நிலையை அடைய நினைப்பவைபோல செயல்படுகின்றன. சுதந்திரத்தை எட்டுவதற்கு வேறுபல சுதந்திரங்களின் ஊடாக அவ்வுயிர் பயணிப்பது அவசியம். உயிரின் எதிர்கால வளர்ச்சிக்கான கதவுகள் காலவரையின்றி திறக்கப்படாதவரை, நிகழ்கால இருப்பினைப்பற்றிப் பேசிப்பயனில்லை. ஒவ்வொருமுறையும் பரம் பொருள் அல்லது மேன்மை நிலையை (Transendane) எட்டிய உயிர் மீண்டும் தொடக்கநிலைக்குத் திரும்புவதென்பது, அதன் ‘நான்’ என்ற இருப்பிலும் வெற்று சந்தோஷங்களிலும் சரிவினை உண்டு பண்ணும். இவ்வீழ்ச்சி உளவியல் அடிப்படையில் பெரிய பாதிப்பாகிறது. இதனைச் சம்பந்தப்பட்ட உயிர் உணர்கிறபோது அதனால் வதைபடுகிறபோது ஏமாற்றத்திற்கு ஆளாகிறது. அடக்குமுறைக்கு உள்ளானதாக நினைக்கிறது.

விளைவு உயிர் மோசமான குணங்கொண்டதாக அவதாரம் எடுக்கிறது. தனது இருப்பினைக்குறித்து சந்தேகிக்கிற ஒவ்வொரு தனிநபருக்கும், வாழ்க்கை படிநிலையில் தன்னை மேன்மைபடுத்தி பார்க்கிற இலட்சியமுண்டு. உண்மையில் பெண்ணுடைய இன்றையநிலை புதிரானது. ஒருபுறம் பிற மனிதரைப்போலவே சுதந்திரமாகவும் தனித்தியங்குவது போலவும் உணரும் அவள் மறுபுறம் தன்னை ஆண், ஓர் வேற்றுலகத்து பிறவி போல நடத்துவதாக உணருகிறாள். அவளது மேன்மை நிலை நோக்கில் தன்னலமும் தனியுரிமை நாட்டமும் இருக்கிற காரணத்தினாலேயே அவளைக் கருவியாக (object) நினைத்து தொடக்கநிலையிலேயே வைத்திருக்க முனைகிறோம் என ஆண்கள் வாதிடுகிறார்கள். இதில் பெண்களுக்கான பிரச்சினை, பிற உயிர்களைப் போலவே ‘தன்னலம் முக்கியம்’ என நினைத்து ஒருபக்கம் தன்பொருட்டு செயல்படுகிறாள்.

மற்றொருபக்கம், சமுதாயத்தில் தன்னை ஒரு பொருட்டாக பிறர்மதிப்பதில்லையே என்ற வேதனையுடன் போராடுகிறாள். இப்படியான சூழ்நிலைகளில் பெண்களை வைத்துக்கொண்டு ஒரு சமுதாயம் எப்படி தனது கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்? அவளுக்கான பாதைகள் என்ன? அவைகளில் ஒருவழிப்பாதைகள் எவை எவை? பிறர் சார்ந்த வாழ்க்கை அவளுக்கான விதியென்ற நிலையில் என்றைக்கு அவள் சுதந்திரத்தைச் சுவாசிப்பது? பெண் சுதந்திரத்தைப் பேணமுடியாத சூழ்நிலைகள் எவை? அவைகளிலிருந்து வெளிவருவதற்கான சாத்தியங்கள் உண்டா? இவைகளெல்லாம் நம்முன் உள்ள அடிப்படை கேள்விகள். அவைகளுக்கான விடைகளை அறிவதற்கான ஆவலில் நாம் இருக்கிறோம். எனது அக்கறைகள் அனைத்துமே தனி ஒருவன் அல்லது ஒருத்திக்கு அளிக்கப்படும் வாய்ப்புகள் பற்றியதும் அவ்வாய்ப்புகள் உருவாக்கித் தருகிற சுதந்திரம் பற்றியதும் அன்றி, வாய்ப்புகளால் கிடைக்கிற மகிழ்ச்சிகள் பற்றியதல்ல.

பெண்களின் இன்றைய பிரச்சினைகளை சரிவர புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவைகளுக்கு உடற்கூறும், உளவியலும், பொருளாதாரமும் அடிப்படைக் காரணங்களென்று நம்புவதை நாம் விட்டாக வேண்டும். எனவே முதற்கட்டமாக உயிரியல், உளப்பகுத்தாய்வு, இயற்பொருள் வாதங்கள் ஆகியவற்றின் பெண்களைக் குறித்த பார்வைகள் என்ன? என்பதை விவாதிக்க இருக்கிறேன். பிறகு ‘உத்தம பெண்கள்’ என்ற சொல்லின் இன்றைய நிலை என்ன? ஏன் பெண்கள் ‘பிறராகக்’ (The Others) - அதாவது அந்நியராகக் கருதும்போக்கு இருக்கிறது. இக்கருத்தில் ஆண்களின் மனப்பாங்கு என்ன என்பது குறித்து முயற்சிக்கிறேன். அடுத்து பெண் தரப்பினைச் சார்ந்தவளாக, அவளுக்கான உலகம் எது? அவளுக்கென தீர்மானிக்கப்பட்ட உலகிலிருந்து விடுபட்டு, மானுட வாழ்க்கையில் தனக்குரிய பங்கை அடைய நினைக்கும் பெண்ணுக்கான சங்கடங்களென்ன? என்பதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.




பெண்ணா? அவளைக் குறித்து உயர்வாகச் சொல்ல என்ன இருக்கிறது, என்று ஆரம்பித்து அவளொரு ‘சினைப்பை’, ‘சூலகம்’, பாலினங்களில் பெண்பால் அதாவது ‘பெட்டை’ என்று இரண்டொரு சொற்களில் (அவளைப்பற்றி விவக்க இச்சொற்கள் போதும் என்பதுபோல) முடித்துக்கொள்ளும் ஒரு கூட்டம் இருக்கிறது. ‘பெண்பிள்ளை’ அல்லது ‘பெட்டை’ என்ற அடைமொழி மூலம் பெண்ணை விலங்கினத்தில் ஒப்பிட்டு இழிவுபடுத்துகிற ஆண், தன்னை ‘ஆண்பிள்ளை’ அல்லது ஆண்சிங்கம் என்று அழைக்கப்பட பெருமிதம் கொள்கிறான். அப்போது தானுமொரு விலங்கினத்தில் சேர்த்தி என்ற எண்ணம் கிஞ்சித்தும் அவனுக்கு உண்டாவதில்லை. ‘பெண்பிள்ளை’ என்ற சொல்லை கீழ்மையானதென்று நாம் கருதுகிறோம்.

அதற்குக் காரணம் அச்சொல் விலங்கினத்தோடு அவளை அடையாளப்படுத்துகிறது என்பதற்காக அல்ல, மாறாக அவளது பெண்குறியோடு இணைந்து அச்சொல் கையாளப்படுகிறதே என்பதற்காக. பெண்ணினம் ஒருவித குரோத உணர்வுடன் எந்நேரமும் ஆணினத்தைச் சீண்டிக்கொண்டிருப்ப தாலோ என்னவோ, அவனுடைய ‘குறியிடம்’ மனிதன் ஆண்கள் மாத்திரமல்ல, சாதுவான ஆண்பால் விலங்கினங்களும் எச்சக்கையாக இருக்க வேண்டுமென்பதுபோல சித்தரிக்கப்படுகிறது.

எனவேதான் தனது செயல்பாடுகளுக்கு, உயிரியல் அடிப்படையில் ஏதாவது காரணம் சொல்ல வேண்டுமென்று ஆண் நினைக்கிறான். அசைந்தபடி நீந்திவரும் ஆணுக்குச் சொந்தமான விந்தணுவை ஆவலுடன் விழுங்கி கபளீகரம் செய்யும் ராட்சத கருமுட்டை; ஆண் கறையான்களை ஆட்டி படைக்கும் வயிறு பெருத்த கறையான்களின் ராணி; பெண் தொழுகைப் பூச்சி; அபதமான காதல் முடிவில் தனது இணையைத் தின்று பசியாறும் பெண் சிலந்தி; சேர்க்கைக்குத் துணை தேடி எச்சிலொழுக சந்துபொந்துகளில் அலையும் பெட்டை நாயும், அதுபோன பின்பும் வீசும் துர்நாற்றமும்; அசிங்கமான சேட்டைகள் செய்து ஆபாசமாய் ஆணினத்தை கவரும் மந்தி; தங்கள் ஆணினத்தின் இராசபோகத் தழுவலில் கட்டுண்டு கிடக்கிற கம்பீரமான காட்டுவிலங்குகளான பெண்புலி, பெண்சிங்கம், பெண்சிறுத்தை இப்படி... ‘பெண்பால்’ என்ற சொல்லை உச்சரித்த மாத்திரத் திலேயே ஆணின் சிந்தனையில் அடுக்கடுக்காய்ச் சித்திரங்கள்.

‘பெண்’ என்றதும் முகத்தை சுளித்தபடி சோம்பேறிகள், பேராசைகொண்டதுகள், அறி விலிகள், மரக்கட்டைகள், காம உணர்ச்சி மிகுந்ததுகள், வெறிபிடித்ததுகள், கீழ்த்தரமானவைகளென பெண்பாலுக்கெனவே தேடிப்பிடித்து வைத்திருக்கிற அத்தனை அடைமொழிகளையும் மொத்தமாக அவளுக்குச் சூட்டி, ஆணானவன் மகிழ்ச்சி கொள்கிறான். காரணம், அவள் தவிர்க்க வேண்டுமெனில் இரண்டு வினாக்களுக்கு, நமக்கு விடை தெரிந்தாக வேண்டும் முதலாவது, விலங்கினத்தில் ‘பெண்பால்’ விலங்குகளின் பங்கு என்ன? மற்றது, மனிதனத்தில், பெண்ணோடு ஒப்பிடக்கூடிய பெண்பால் விலங்கென்று எதைக்குறிப்பிடலாம்?.

இயற்கையைப் புரிந்துகொள்ளுதல் எளிதான தல்ல ‘இது ஆண், அது பெண்’, என்று எந்த ஒன்றையும் வெகு எளிதாக இனம் பிரித்துவிட பலநேரங்களில் இயல்வதில்லை. நிறம், புள்ளிகள், சிறகுகளின் வடிவம் ஆகியவற்றில், இருபாலினத்திற்கும் இடையில், நமக்கு நல்ல காலமென்றால் வேறுபாடுகள் இருக்கக் காண்கிறோம். சில நேரங்களில் ஆண்-பெண் இருவருக்குமான செயல்பாடுகளில் வேற்றுமைகளே இல்லை என்ற நிலையில் அவற்றை பிரித்து இனங்காண நம்மால் முடிவதில்லை. ஒரு நல்ல உதாரணம் அமீபாக்கள்.

எனினும் பொதுவாக, ஓர் உயிரின் உற்பத்தி வரலாற்றின் ஆரம்பக்கட்டத்தில், இருபால் வேற்றுமைகள் தெள்ளத் தெளிவாகவே வெளிப்படுகின்றன. ஆனால் பலரும் சொல்வதைப் போல இவ்விரு இனத்திற்குமான குணங்கள் எதிரெதிர் நிலையில் அதாவது ஒன்று செயற்பாடு (Activity) குணத்துடனும், மற்றது செயற்பாடு (Passivity) குணத்துடனுமில்லை என்பதை உயிர்ப்பு தன்மையுடன் இருக்கும் கருமுட்டையின் உட்கருவினாலும், கருவின் வளர்ச்சியென்பது இயந்திரத் தனமாக அல்லாமல் ஓர் உயியல் இயக்கமாகயிருப்பதாலும் அறியலாம்.

இக்காரணங்களாலேயே, கருவளர்ச்சியை ஒரு நிரந்தரமாற்றமென்கிறோம். விந்தணு உற்பத்தியாவதோடு சரி, பின்னர் அதன் சீவத்துவம் முட்டையால் பராமக்கப்படுகிறது. கருமுட்டை அப்படியல்ல, வாழ்வும் தாழ்வும் பராமப்பு சார்ந்ததென்கிற நிலையில் அதனால் அமைதியாக இருக்க முடிவதில்லை. எனினும், இன்னொரு உயிராக உருவெடுக்கிற இந்நிகழ்வுகளின் நடைமுறைகளை “உற்பத்தி-பராமப்பு” எனப் பித்து நாம் பார்க்க முடிகிற போதும், இரண்டுமே சுறுசுறுப்பாய் செயல்படுகின்றன, சோம்பியநிலையில் அவை இருப்பதில்லை.

உயிர்வாழ்க்கையின் தொடர்ச்சி என்பது உயிரணுவில் ஏற்படும் பிளவுகளின் உத்தரவாதத்தை பொருத்தது, ஓர் உயிரணு பலவாக பிளவுபடுவதற்கு முன்பு நிகழ்கிற கணநேரக் கட்டிக்காத்தல் பராமப்பு ஆகும். ஆனால் மாறாத தன்மைகொண்ட இருப்பொன்று அநித்யமான சேர்க்கைநிலையில் வெடித்துப் பலதுண்டுகளாக பிவது உற்பத்தி. “உயிரணுக்கள் ஒன்று பலவாக பிரிவுண்ட போதிலும், உயிர்வாழ்க்கை என்கிற சங்கிலித் தொடரைப் பராமக்கும் செயல்பாட்டிற்குப் “பெண்” காரணமாக இருக்கிறது. புதிய பிளவின்போது தேவைப்படும் திறனுக்கும், பிளவுண்ட உயிரணுக்களின் தனித்தன்மைக்கும், உற்பத்தி என்கிற “ஆண்” செயல்பாடு காரணமாகிறது. இப்பண்பு சுய பலசாலியாக நிலைநிறுத்தவும், தனக்குத் தேவையான உத்வேகத்தை சொந்த வாழ்க்கையிலும் பெறவும் “ஆணு”க்கு உதவக்கூடும்.

மாறாக இந்நிகழ்வில் ஒவ்வொருமுறையும் உயிரணுவின் எதிர்காலத்திற்காக “பெண்” தனது தனித்தன்மையை இழக்கிறது; விநோதமான சக்தியைப்போல “ஆண்”, “பெண்ணைத்” தகாததாகக் கருதி ஆட்டுவிக்கிறது. அதனாற்தானோ என்னவோ பால்பாகுபாட்டினை உயர்த்திப் பிடிக்கும் உயிரணுக்களின் தனித்தன்மை சோர்வுறாமற் தொடர்கிறது. தனது பலத்தினை பிரயோகிக்கவும், அதன்வழி தன்னைத் தொடர்ந்து எஜமானனாக வைத்திருக்கவும் என்னென்ன உபாயங்கள் உண்டோ அத்தனையும் ஆண் தேட, பெண்ணோ அடிமையாக தான் நடத்தப்படுகிறோமென்று நினைக்கிறது. ஒருபுறம் தனது சொந்த நலன்கள் காக்கபட வேண்டுமென்கிற கவலை, மற்றொருபக்கம் இவ்விரண்டையும் இயக்குகிற சக்திகள், விளைவு “பெண்”ணைக் சீரழிக்கிறது.

பெண் முயல், பெண் எலிகளைக் காட்டிலும் பசுவும், பெண் குதிரையும் பிரசவத்தின்போது படுகிற வேதனையும், உறும் ஆபத்தும் பன்மடங்கு அதிகம். அவ்வாறே பெண்பாலினத்தில் பிரத்தியேகத் தனித்தன்மையுடன் இருக்கிற, “பெண்” வெகு எளிதாகப் பாதிக்கப்படுகிறவள், விளைவு அவளுடைய வாழ்க்கையும் மிகவும் பரிதாபத்திற்குயதாக அமைந்து, தனது சக “ஆண்” வர்க்கத்திற்கும் அவளுக்குமான வேறுபாட்டை மிக ஆழமாகச் சித்தரிக்கிறது.

மனிதரினத்தைப் போலவே, அநேகமாக பிற இனங்களிலும், ஆண் - பெண் பிறப்பு விகிதாச்சாரம் சசமமாகவே இருக்கிறதெனச் சொல்லலாம் (நூறு பெண்களுக்கு - நூற்று நான்கு ஆண்கள்) கரு வளரும் விதத்திலும் பேதங்களில்லை. எனினும் கரு வளர்ச்சியின் ஆரம்பக்கட்டத்தில் அதன் பாதுகாப்புக்கென்று உருவாகும் “புறசீதப்படலம்” (epithelium) பெண்கருவில் மட்டும் பொதுத் தன்மையுடன் அதிக நாட்கள் நீடிக்கிறது. அவ்வாறு நீடிப்பதால் வளர்ச்சியாக்கிகளின் அல்லது இயக்குநீர் (harmones) தாக்கத்திற்கு அப்பெண்கரு உள்ளாவதோடு, அதன் வளர்ச்சி பல நேரங்களில் எதிர்மறையாய் அமைந்துவிடுகிறது.

பெரும்பாலான இருபால் உயிரிகள் (hermaphodites) மரபணுவின் வழியில் (genotype) பெண்பாற்தன்மை கொண்டதாகத் தொடக்கத்தில் இருந்தபோதிலும் பின்னர் அவை ஆணாக மாறிவிடுவதைப் பார்க்கிறோம். பெண்கரு தனது பெண் தன்மையை ஏற்க தயங்குகிறபோது, அக்கருவிற்கான ஆண் தன்மைகள் தீர்மானிக்கப்படுகிறதென்று சொல்லப் படுகிறது, ஆனாலும் கருவின் ஆரம்பகால குளறுபடி தவறுதலாக உணரப்படுவதால், வேறுபட்ட முடிவுகளுக்குக் காரணமாகின்றன.

உருவானவுடன், பிறப்புறுப்புகள் இருபாலரிடத்திலும் சமச்சீராகவே இருக்கின்றன. ஆண்பெண் இரண்டிற்குமான வளர்ச்சியாக்கிகள் (harmones), உடலின் இரண்டாம்நிலை வேறுபாடுகளை வழிநடத்தும் திண்மநீர்மம் (sterol) சார்ந்த பொதுவான வேதியியல் பண்புடன் இருப்பதை, இறுதிக்கட்ட கொலெஸ்ட்ரின் சோதனைகள் உறுதி செய்கின்றன. ஆக இது “பெண்” என்று சுட்டிக்காட்ட கருநிலையில் தெளிவான விதிகளோ, வரையறுக்கப்பட்ட உடற்கூறுகளோ இல்லாததால், அவற்றின் செயல்பாடுகளில் ஏற்படும் பரிணாமத்தினை வைத்து ஆணிடமிருந்து பிரித்து அவளை அடையாளப்படுத்த நமக்கு உதவுகிறது.

பெண்ணுடன் ஒப்பிடுகிற போது ஆண்கருவில் வளர்ச்சி சிக்கல்களில்லை. பிறப்பிலிருந்து, உய பருவம் அடையும்வரை, ஓர் ஆணின் வளர்ச்சியை ஏறக்குறைய சீரான வளர்ச்சியெனக் கருதலாம்; பதினைந்து அல்லது பதினாறு வயதில் தொடங்கும் விந்தாக்கம் (spermotogenesis), இடைவெளியின்றி அவனது முதுமைக்காலம்வரை தொடர, வீரியமுள்ள உடலுக்குச் சொந்தக்காரனைப்போல தோன்றுகிறான். ஆக அப்போதிலிருந்தே அவனது பாலியல் தொடர்புபடுத்தப்பட்டு, பிற உயிர்கள் மீதான அவனது எல்லை மீறல்கள்கூட ஓர் உன்னதத்தை எட்டுவதற்கான முதற்படியென ஏற்றுக்கொள்கிறோம். மாறாக பெண்கள் கதை மிகவும் சிக்கலுக்குறியதாக உள்ளது. அவளது முதிர்வுறாக்கரு பருவத்தின்போதே (the embryonic period) வேண்டிய தாய்முட்டைகள் (oocycles) கிடைத்துவிடுகின்றனஙீ ஒவ்வொரு சூலகத்திலும் (ovary) ஐம்பதாயிரத்திற்கு குறையாத முட்டைகள் (ovums), அவை ஒவ்வொன்றும் மிகச்சிறிய பைகளில் (follicles) பாதுகாக்கப்படினும், ஏறக்குறைய நானூறு முட்டைகளே உய முதிர்ச்சியை எட்டுகின்றன.

பிறந்த உடனேயே, உயிரணு அவளை தனதுடமையாக்கிக்கொண்டு, இறுதிவரை அவ்வுரிமையைத் தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து பாடுபடுகிறது, அதற்கேற்றாற் போல பெண்ணுடைய உலக வாழ்க்கையின் ஆரம்பமே ஒருவகையில் பூப்புப்பருவத்தினைக் (puberty) கடக்குங் காலமெனலாம். திடீரென்று தாய் முட்டைகள் பெரிதாகின்றன; சூலகம் அல்லது சினைப்பையானது தனது அளவில் மாற்றம் பெறுகிறது; இம்மாற்றம், உண்டாகும் கருவுக்கேற்ற அளவிலென்று சொல்லப்படுகிறது. பிற உறுப்புகளிலும் அபார வளர்ச்சி, பிறப்புறுப்பில் பெரிய மாற்றமென்று ஏதுமில்லை. முதிர்ச்சியுறாமல் சில பைகள் (follicles) மாத்திரம் உப்புகின்றன.

பெண்ணுக்கும் பையனுக்குமான வளர்ச்சியில் வேறுபாடுகளில்லை என்கிறபோதும், பெண்ணானவள் ஒத்த வயதுடைய ஆணைக்காட்டிலும், எடையிலும், உயரத்திலும் அடையாளத்தை வலியுறுத்த உதவுவதுபோன்று நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன: பைகளின் எண்ணிக்கை அதிகமாகிறது; இரண்டாவதாக சூற்பைகள் அளவிற் பெருத்து இடநெருக்கடியில் தவிக்க, முட்டைகளிலொன்று முதிர்ச்சி அடைகிறது; மாதவிடாய்க் காலவட்டம் செயற்படத் தொடங்குகிறது; மூன்றாவதாக வளர்ச்சியின் இறுதிக்கட்டத்தினை அடையும் பிறப்புறுப்பு தனது முழு அளவை எட்டுகிறது. இறுதியாக உடல்வாகு பெண்தன்மையை அடைந்து, உட்சுரப்பிகளுக்கடையே (enodocrine) ஓர் இணக்கத்தினை ஏற்படுத்துகிறது.

பெண் பூப்படையும் காலம் மிகவும் இக்கட்டான காலமென்பதைக் குறிப்பிட வேண்டும். நடைபெறுகிற இந்த மாற்றத்தை, பெண்ணுடல் எதிர்ப்பின்றி அமைதியாக ஏற்றுக்கொள்வதில்லை. தனது முழுபலத்தையுங்கொண்டு முரண்பட்டு நிற்பதால், உடல் மெலிந்து, உயிர்வாழ்க்கைக்கே ஆபத்தென்கிற நிலை. ஆண்-பெண் இருபாலடத்திலும் பருவம் அடைவதற்கு முன்பு சமஅளவிலிருக்கும் இறப்பு விகிதம், பதினான்கிலிருந்து பதினெட்டு வயதிற்கிடையில் 100 பையன்களுக்கு 128 பெண்கள் என்றும், பதினெட்டிற்கும் இருபத்திரண்டு வயதிற்குமான இடைபட்ட காலத்தில் 100 பையன்களுக்கு 105 பெண்கள் என்றும் இருப்பதைப் பார்க்கிறோம். பூப்படையும் தருணத்திற்தான் பெண்கள் இரத்தச்சோகை, காசநோய், பக்கவாதம், எலும்பு அழற்சி முதலான நோய்களின் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

ஒருசில பெண்கள் மிக இளம்வயதில் அதாவது நான்கு அல்லது ஐந்து வயதில் பூப்படைவதும், வேறு சிலருக்குப் பல ஆண்டுகள் தள்ளிப்போக அவர்கள் குழந்தைத் தன்மையுடன் சூதகமின்மை (amenorrhoea), சூதகவலி (dysmenorrhoea) போன்றவற்றினால் துன்புறுகிறார்கள். சில பெண்களிடத்தில் அண்ணீரகச் சுரப்பிகள்(suprarenal glands) கூடுதலாக இயங்குவதன் காரணமாக, ஆண்மையியத்திற்கான (virilism) அறிகுறிகள்.

உண்மையில் உயரிினத்தின் செயல்பாடே எதேச்சதிகாரமாக இருக்கிறபொழுது, இப்படியான முரண்பாட்டையெல்லாம், ஏதோ பெண்ணுயிருக்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாட முடியாது. சுதந்திரமாக செயல்பட்டு தனது தனித்துவத்தைக் காப்பாற்றிக்கொள்ளாத போதும், அதன் பராமரிப்புப் பணி தொடர்கிறது. நீயா நானா என்கிற பிரச்சினைக்கு ஒருவகையில் காரணமாகிறது. இத்தகைய இருமை இயல்புகள்(duality) சூலகத்தின் பணிகளிலும் குறுக்கிடுவதைப் பார்க்கிறோம். பெண்ணின் உயிர்சக்தியானது சூற்பையைச் சார்ந்திருக்க, ஆணின் உயிர்சக்தி விந்தகங்களை நம்பியிருக்கிறது. ஆணோ பெண்ணோ கருத்தடை செய்து கொள்கிறபோது மலட்டுத் தன்மையோடு, வளர்ச்சியில், ஒருவித தேக்கநிலையையும் சீர்கேட்டையும் சந்திக்கிறார்கள். அதாவது ஆண் அல்லது பெண்ணுக்குய தகுதியை எட்டாத எதிர்மாறான நிலை. சம்பந்தப்பட்ட உயிர் நொடித்துப்போகவும், சமச்சீரற்ற அசாதரண வாழ்க்கையை மேற்கொள்ளவும் காரணமாகிறது.


பிறப்புறுப்பு சார்ந்தே வாழ்க்கை என்றறிகிறோம். பிறப்புறுப்பு பெரும்பாலும் அது சார்ந்த உயிருக்கு நெருக்கடியை உண்டாக்குவதில் காட்டும் அக்கறையை, நலன்களில் காட்டுவதில்லை. வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் கருத்தடை செய்து கொள்ளலாம் என்பதால், பூப்படையும்போது ஏற்படுகிற மார்பகங்களின் வளர்ச்சியும், பெண்ணின் நலனுக்கென்று பெரிதாக எதையும் சாதிப்பதில்லை. சூல்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதும், அதன் முதிர்ச்சிக்குக் காத்திருப்பதும், தனது தேவைகளுக்கேற்ப கருப்பையைத்(Womb) தகவமைத்துக் கொள்வதும் சூற்பையின்(overy) நோக்கமாக இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இப்பணிகளைப் பார்க்கிறபோது அவற்றில் சீரானத் தன்மை இல்லை என்பது வெளிப்படை. ஆகப் பெண்ணொருத்தியின் வாழ்க்கை என்பது சினைமுட்டைகளுக்கு ஏற்ப இருக்கிறதேயன்றி அவளை நம்பி அல்ல. பூப்படையும் பருவம் தொடங்கி மாதவிடாய் நிற்கும் காலம்வரை, அவளிடத்தில் அவளை மையமாக வைத்து நிகழ்த்தப்படும் சம்பவத்திற்கு அவள் முக்கியமல்ல என்றாகிறது
.
மாதவிடாயினால் சம்பந்தப்பட்ட உயிருக்கு எந்தப் பலனுமில்லை என்பதாலோ என்னவோ ஆங்கிலோ-சக்ஸோன் மக்கள் மாதவிடாயை “the curse”அதாவது பெண்களுக்கு விடப்பட்ட “சாபமாக”க் எடுத்துக்கொள்கிறார்கள். அரிஸ்டாட் காலத்தில் கருத்தரிக்கிற நேரத்தில் குழந்தை உருவாகத் தேவையான இரத்தமும் சதையுமே ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஏற்படும் இரத்தப்போக்கென்று கருதப்பட்டது. இப்பழமை யான கருதுகோளின்படி பெண்ணுடல் ஓய்வின்றி கருத்தப்பது தொடர்பான பணிகளில் ஈடுபடவே படைக்கப்பட்டதாகிறது.

இதர பாலூட்டி இனங்களுக்கு சினைப்படுங் காலங்கெளென்று தனியாக இருக்கின்றன. உயர்வகை குரங்குகளிடத்திலும், பெண்களிடத்திலும் மட்டுமே ரத்தப் போக்கினைப் பார்க்கிறோம். இதர இனங்களில் ரத்தப்போக்கென்று எதுவுமில்லை. சூல்களை(ovum) சுற்றியுள்ள கிராஃப் சிறுபைகளில்(Graff folllicles) ஒன்று அளவிற் பெரிதாகி, முதிர்ச்சியடைய பதினான்கு நாட்கள் எடுத்துக்கொள்கிறது. அதே காலக்கட்டத்தில் சூல்பை(ovary) சிறுபைகளை(follicles) ஒட்டி “பெலிக்யுலின்” என்ற இயக்குநீரைச் சுரக்கிறது. சரியாக பதினான்காம் நாள் முதிர்ந்த சூல்கொண்ட கிராஃப் சிறுபையின் விதானம் வெடித்துக் கிழிய (சில நேரங்களில் குருதிக் கசிவிற்கும் வாய்ப்புண்டு) சூல் வெளிப்பட்டு, கருப்பையை இணைக்கும் குழாயில் விழுகிறது. கிழிந்த பை ஒருவித மஞ்சள் படலமாக மாறுகிறது. அடுத்துவருவது மஞ்சள் படலத்துடனான இரண்டாம் கட்டம்(la phase luthenique), இந்த நிலையில் புரோஜெஸ்டின் என்கிற இயக்கு நீர்(harmone) சுரந்து கருப்பையில் சில காயங்களை ஆற்றுகிறது. கருவிதானம் தந்துகிகளால் சிவக்கின்றன.

பின்னர் விந்து சுருங்கியும் ஒருவகை அடுக்கு மடிப்புகளை தொட்டில்போல் கருப்பையில் உருவாக்கிவிட்டு, கருவுற்ற முட்டையை எதிர்பார்த்து, மடல்களைப் பிக்காமல் காத்திருக்கிறது. பிற பாலூட்டிகளில் வீணான உயிரணுக்களை சுமந்துசெல்ல நிணநீர்க்கலங்கள் இருக்கின்றன. ஆனால் பெண்களிடத்தில் மேலே குறிப்பிட்ட மடிப்புகள் சிதைவுறுகிறபொழுது, ஒருவித வழவழப்பான சவ்வொன்று உரிகிறது. அதனால் தந்தூகிகள் திறந்துகொள்ள, இரத்தம் வெளியே கசிகிறது.

மஞ்சள் படலம் சிதைந்து, மீண்டும் சவ்வினை உருவாக்க மற்றொரு நிகழ்வுக்கு அனைத்தும் தயாராகின்றன. இந்நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் விநோதமாக இருப்பதோடு, மொத்த செயல்பாடும் மிக சிக்கலானதாக இருக்கிறது. இச்சமயத்தில் சுரக்கும் இயக்குநீரால் தைராய்டு மற்றும் பிட்யூட்டரிகளில் ஏற்படும் விளைவுகள், நரம்புமண்டலம், இரத்த ஓட்டம், சுவாசம் தொடர்பான மூளை, இதயம், நுரையீரல் கல்லீரல், குடலென சுருக்கமாகச் சொல்வதென்றால் உடல் முழுவதும் இச்சம்பவத்தில் பங்கேற்கிறது.

ஏறக்குறைய எண்பத்தைந்து விழுக்காடு பெண்கள், மாதவிடாய்காலத்தில் பாதிக்கப்படுகிறார்கள். இரத்தப்போக்கிற்கு முன்பு பெண்களின் மன அழுத்தம் கூடுதலாக இருப்பதும், பின்னர் குறைவதும் அதற்கு உதாரணம். நாடித்துடிப்்பும், உடல் வெப்பமும் சட்டென்று உயர்வதைப் பார்க்கிறோம். பெரும்பாலானப் பெண்கள் காய்ச்சல், வயிற்று வலியென்று அவதிப்படுகின்றனர். சில நேரங்களில் மலச்சிக்கலும் அதனைத் தொடர்ந்து வயிற்றுப் போக்கும் கல்லீரலின் பருமன் திடீர் அதிகப்பும், சிறுநீருப்பு(urea) வெண்புரதம்(albumin) முதலானவை உடலிற் தங்கவும் நேரிடுவதுண்டு. அதிக எண்ணிக்கையிலானப் பெண்கள் பிட்யூட்டரியில் சுரக்கும் சளியின் வரவினால், தொண்டைப் புண்ணால் அவதிப்படுகிறறன்றனர்.

செவி மற்றும் கண்கறஎளில் பாதிப்புக்கு உள்ளாகிறவர்களும் உண்டு. மாதவிடாயின் ஆரம்பத்தில் சாதாரண நாட்களைக்காட்டிலும் மிக அதிகமான வியர்வை வெளியேற ஆரம்பித்து, மாதவிடாய் நாட்களில் தொடர, அதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. அடிப்படை வளர்சிதை மாற்றத்தின் அளவும் வேகமெடுக்கிறது. இரத்த அணுக்கள் எண்ணிக்கையில் குறைந்த போதிலும், திசுக்களில் பொதுவாக காப்பு வைப்பாக இருக்கவேண்டிய பொருட்களைக் குறிப்பாக கால்சியம் உப்புகள் போன்றவற்றைக் கொண்டு செல்லும் பணியிற் தொய்விருப்பதில்லை. இரத்த அணுக்களில் காணப்படும் இவ்வகை உப்புகளால் சூலகத்தில் சிலமாற்றங்கள் ஏற்படுகின்றன. தைராய்டு அசாதரண வளர்ச்சிக்கு(hypertrophy) உள்ளாகிறது.

கருதரிப்பதற்கு முன்பாக, கருப்பையில், பிட்யூரிட்ட சளி நீர்மம்(mucus) கூடுதலாகச் சுரப்பதால் உண்டாகும் தடுமாற்றம், ஒருவித நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்துகிறது. மத்திய நரம்பு மண்டல்தைப் பாதிப்பதோடு பல பெண்கள் தலைவலியென்று அல்லற்படுகிறார்கள். சுவாசம், இதயத்துடிப்புப் போன்றவைகளுங் கூட முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு அதிகக்கிறது. மையக் கட்டுப்பாட்டினை இழந்து, அன்னிச்சையாக செயல்படவும், நெருக்கடி நிலையறிந்து காரியமாற்றவும் வகையற்றவளாகி, உணர்ச்சி வசப்படுவதும், அமைதி இழந்து தவிப்பதும், வழக்கத்திற்கு அதிகமாக எரிச்சல் படுவதுமென மொத்தத்தில் மனம்பிறந்தவள்போல அவள் நடந்துகொள்கிறாள். மாதவிடாய்க்காலத்தில்தான் மிக மோசமான அளவில் அவளது உடல்வதைப்படுவதைப் பார்க்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் பிடிவாதங் கொண்டவளாகவும், முற்றிலும் புதிய குணத்துடனும் பிறருக்கு அவளை அறிமுகப்படுத்துவதும் அதுதான். ஒவ்வொரு மாதமும் கருதரிக்கவென்று கருப்பையைத் தயார் செய்வதும், பின்னர் அதனைக் கலைத்துக் கொள்ளவும் செய்கிறாள். ஆணைப் போலவே பெண்ணும் அவளுக்கென்று ஓர் உடலைப் பெற்றிருந்தபோதும் அவ்வுடல் அவளது உடலாக இல்லையென்பதும் உண்மை.

கருவுற்ற முட்டை கருப்பையில் விழுந்து வளரும் நிலையில், பெண்ணாணவள், முற்றிலும் ஒரு புதிய அனுபவத்திற்கு உள்ளாகிறாள். பெண்ணின் உணவுமுறை ஒழுங்காகயிருந்து நல்ல ஆரோக்கியத்துடன் அவள் இருப்பாளென்றால் கரு சுமக்குங் காலத்தைச் சராசரி நிகழ்வென்றும், அதனாற் தாய்க்குப் பாதகமேதுமில்லையென்றும் சொல்லலாம். கருவுக்கும் தாய்க்குமிடையில் நிகழும் ஒருங்கிணைந்த செயல்கூட அவளுக்குச் சாதகமானதாகவே இருக்கிறது. சமூகப்பயன்பாட்டின் அடிப்படையில் பெண்ணின் கர்ப்ப காலம், மனதளவில் ஓரளவு நம்பிக்கை ஊட்டக்கூடியதாக இருப்பினும், உடலளவில் அவளுக்கு ஏதேனும் நன்மை உண்டாக்குகிறதாவென்றால் இல்லை. தவிர பிள்ளைப் பேறுகாலமென்பது மிகவும் அயர்வினைத் தரக்கூடிய பணி, கடுமையானத் தியாகங்களை அதற்கென்று செய்ய வேண்டியிருக்கிறது.

புதிய உயின் வரவை எதிர்க்கின்ற வகையில் அவளது உடலுறுப்புகள் நடந்துகொள்ள, கர்ப்பமுற்ற முதல் மாதத்தில் பசியின்மையும், குமட்டலும் வாந்தியும் அவளுக்குத் தவறாமல் உண்டாகிறது. இதுபோன்ற அறிகுறிகளை வீடுகளில் வளர்க்கப்படுகிற பெண் விலங்குகளிடத்தில் நாம் காணமுடிவதில்லை. பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்தென அனைத்தும் அவளிடத்தில் பற்றாக்குறைநிலையில் இருக்கின்றன.

குறிப்பாக இரும்புச் சத்தின் இழப்பினை அத்தனைச் சுலபமாக சரிசெய்ய முடிவதில்லை. கூடுதல் வளர்சிதைமாற்றம் உட்சுரப்பிகளைத் தூண்டுகிறது. கருதப்பதற்கு முன்னிலும் கூடுதலாகச் செயல்பட தூண்டபடுகின்றன. உணவின்றி இருப்பவர்கள், பலவீனமாக இருப்பவர்கள், இரத்தக்கசிவு நோய்க்கு ஆளானவர்கள், வெகுநாட்கள் நோய்வாய்பட்ட நிலையில் குணமடைந்து வருபவர்கள் ஆகியோடம் காண்பதைப் போல இரத்தத்தின் அளவு குறைந்து இரத்தச்சோகை உண்டாகிறது. ஓரளவு ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்துள்ள உணவினை உட்கொள்ள வாய்ப்புள்ள பெண்ணானவள் தனது பேறுகாலத்தில் இழந்தவற்றை, அதிகச் சிரமமின்றி திரும்பப்பெற ஓரளவு வாய்ப்புண்டு. ஆனால் பெரும்பாலானப் பெண்கள் மகப்பேறுகாலத்தில் பதாபமான முடிவுகளையோ அல்லது குறைந்தபட்சம் ஆபத்தான விபத்துகளையோ சந்திக்கிறார்கள்.

உடல் பலவீனமும், சுகாதாரமின்மையுமுள்ள கிராமப்புற பெண்கள், தாய்மை அடைவதையும் பார்க்கிறோம். பிரசவம் என்பது அதிக உடல் வருத்தத்தைத் தருவது மட்டுமல்ல ஆபத்தானதுங்கூட. இம்மாதியான நெருக்கடிகளில் உடலானது உயிருக்கோ, தொடர்புடைய நபருக்கோ எந்த விதத்திலும் நம்பகத் தன்மைகொண்டதாக இருப்பதில்லையென்பதை மிகத் தெளிவாக அறிகிறோம். குழந்தை இறந்து பிறப்பதும் அல்லது குழந்தை உயிர்பிழைக்க தாய் இறப்பதும் அல்லது இருவருமே பிழைத்து வந்தாலும், இறக்கும்வரை பீடிக்கிற நோய்க்கு தாய் பலியாவதும் நடக்கிறது.

பாலூட்டவதும் மிகக் கொடூரமான பணி. இங்கேயும் புரோஜெஸ்டின்(progestine) என்கிற சுரப்பி முக்கியப்பங்கினை வகிக்கிறது. மார்பகங்களில்் பாலினைச் சுரக்கச் செய்வது இதுவே. கூடுதலாகச் சுரக்கிறபோது வலிக்கிறது. சில நேரங்களில் காய்ச்சலும் வருவதுண்டு. தமது ஆரோக்கியத்தை குலைத்துக்கொண்டே அவை பிறந்த குழந்தைக்குப் பாலூட்டுகின்றன. மகப்பேறு, சம்பந்தபட்ட உயிரினை பரிதாப நிலையில் வைப்பதோடு, அதனுடலுக்கும் ஏதேனும் நேர்ந்துவிடுமோவென்ற கவலையை அளிக்கிறது. “பெண்களுக்கான நோய்கள் வயிற்றில் இருக்கின்றன” எனச் சொல்ல கேட்டிருக்கிறோம்.

உண்மைதான், அவளுக்கான பகையாளி தனிமத்தை, அரிக்கும் கறையானை பத்திரப்படுத்தி வைத்திருப்பவள் அவள்தான். சூற்பையில் ஏற்படும் அசாதரண நிகழ்வு, கருப்பை நீர்மத்தில் எதிர் விளைவினை ஏற்படுத்த குறை பிரசவத்திற்குக் காரணமாகிறது; மாதவிடாய் காலத்தில் உண்டாகும் மஞ்சள் படலம் கரைந்து போகாமல் தங்கிப் போவதால் கருப்பை பாதிப்புக்குள்ளாகிறது. ஆக ஒரு பெண்ணுக்கான எதிரிகள் அவளுடைய உடலுக்கு வெளியிலிருந்து வருவதில்லை. பெண்ணானவள் உயிரின் மிகக்கொடிய ஆதிக்கத்திலிருந்து மீண்டும் தப்பிக்க வேண்டி யிருப்பது அவளது மாதவிடாய் ஓய்வுக்காலமான நாற்பத்தைந்து வயதிற்கும் -ஐம்பத்தைந்து வயத்திற்குமான இடைப்பட்டக் காலத்திலாகும். இது ஒரு பெண் பருவமுறுகிறபோது உட்படுகிற மாற்றங்களுக்கு எதிரிடையானது. சூலகத்தின் செயல்பாடு குறைவதோடு மட்டுமல்ல ஒரு கட்டத்தில் இல்லையென்றாகிறது.

அதன் விளைவாக சம்பந்தப்பட்ட பெண்ணின் திறல் நலிவுறுகிறது. சுரப்பிகள் சிதைமாற்றத்திற்கு உள்ளாகின்றன. சூலகம் ஓய்ந்துவிட்ட நிலையில் அதற்கும் சேர்த்து தைராய்டும், பிட்யூரிட்ட சுரப்பியும் உழைக்கின்றன. வயதுகாரணமாக உண்டாகும் உளச் சோர்வோடு, தகிக்கும் வெப்பம், இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி, சிலநேரங்களில் பாலுறவில் நாட்டமென, பிரச்சினைகள் அதிகக்கின்றன. ஒரு சில பெண்களுக்கு திசுக்களில் கொழுப்பு சேர்ந்துபோக, வேறு சிலர் ஆண்தன்மை அடைகிறார்கள். பல பெண்களுக்கு உட்சுரப்பி(endocrine) சமநிலை ஏற்படுகிறது. பெண், பெண்பாலுக்குண்டான தளையிலிருந்து விடுபட்டவளாகிறாள்.

இந்த நிலையில் பெண்ணை ஓர் அரவானியுடன் ஒப்பிடலாமென்றால் இயலாது. ஏனெனில் அரவானியின் வீரியத்திற்கு இழப்புகளில்லை. ஆனால் இதுவரை அவள் சேவகம் செய்துவந்த அவளது சக்திக்கு அப்பாற்பட்ட ஏவலிடமிருந்து அவள் விடுதலை பெற்றிருக்கிறாள் என்று கருதலாம். முதன்முதலாக அவள் அவளாக இருக்கிறாள். ஒருசிலர் வயதான பெண்களை மூன்றாம் இனம் என்கிறார்கள். அவர்கள் ஆண்களல்ல அடுத்து அவர்களைப் பெண்ணின மென்று அடையாளப் படுத்திய சுரப்பிகளின் பணிகள் இல்லை என்றாகியதால், இனிப் பெண்களுமல்ல. உடலியலின் இப்புதிய குறியீடானது, சம்பந்தப்பட்ட பெண்கள் இதுவரைப் கண்டிராத ஆரோக்கியம், சீரான உடல்நிலையென்ற அளவீடுகளைப் பொருத்தது.

பாலியல் அடிப்படையிலான இப்புதிய வேறுபாடு, பெண்ணிற்கென சில தனித்தன்மைகளை வழங்குகின்றன. அத்தகுதிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிலவிளைவுகளுக்குப் பொறுப்பேற்கின்றன. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, சுரப்பிகளின் பணிகளே பெண்ணுடலைத் தீர்மானிக்கின்றன. ஓர் ஆணைக்காட்டிலும் பெண் என்பவள் பொதுவாகச் சிறியவள். எடையில் குறைந்தும், மெலிந்த எலும்புக்குச் சொந்தக் காரியாகவும் இருக்கிறாள்.

கருவுருதல் மற்றும் பிள்ளைப்பேறு இரண்டிற்கும் உதவுகிற வகையில் பெரிய இடுப்பும், ஆணைக்காட்டிலும் சீரான உடல் வடிவமும் கொண்டவள். உருவ இயல், சருமம், மயிர் எனப் பொதுத் தோற்றத்திற்கான காரணிகளுக்கிடையே ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறைய வேற்றுமைகளிருக்கின்றன. தசைக்கான வலிமையில் பெண்களுக்கும் ஆண்களுக்குமான விகிதாசாரம் 3:2 என்ற அளிவலிருக்கிறது. நுரையீரல், மூச்சுக்குழல், சுவாச திறனும் பெண்ணுக்குக் குறைவு. குறிப்பாக குரல்வளையில் ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள பேதத்தினை, குரல்கள் மூலம் அறிகிறோம். அவ்வாறே பெண்ணொருத்தியின் இரத்த அளவு ஆணைக்காட்டிலும் குறைவு. குறைவான இரத்தப்புரதம் பெண்களை எளிதாக இரத்தசோகைக்குப் பலியாக்குகிறது.

அவர்கள் நாடி அதிகமாக துடிக்கின்றன. அவள் வெகு எளிதாக கன்னம் சிவப்பது உறுதி வாய்ந்த இரத்த நாளங்களின்மையால். பொதுவாக பெண்ணின் எல்லா உறுப்புகளிடத்திலும் இத்தகைய வலுவற்ற தன்மையைப் பார்க்கிறோம். ஆண்களிடத்தில் இந்த உறுதிப்பாட்டின் நன்மையை பேறு காலங்களிலும் அதிகஅளவில் கால்சியம் உப்பு பெண்ணுடலிலிருந்து வெளியேறுகிறது. கருமுட்டைகள் இங்கே சிதைமாற்றத்திற்கு உட்படுகின்றன. விளைவு கருமுட்டைகளின் உறுதிப் பாடற்றதன்மையே அவற்றின் இருப்பைக் கலைத்து போடவும் காரணமாகின்றன. கருமுட்டைகளின் இருப்பில் ஏற்படும் இத்தகைய ஒழுங்கின்மை, ஆணுடையதைக் காட்டிலும் நன்கு வளர்ச்சியடைந்துள்ள பெண்ணுடைய தைராய்டு சுரப்பியையும் விட்டுû வப்பதில்லை. பெண்ணின் உட்சுரப்பிகளில் (endocrine) ஏற்படும் மற்றும் நரம்புகளின் கட்டுப்பாட்டில் குழப்பம் ஏற்படுகிறது.

பெண்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள். இம்மாற்றத்தினை இரத்தநாளங்களிலும் உணருகிறோம். இதயம் வேகமாகத் துடிக்கிறது. முகம் சிவந்து போகிறது. இது தொடர்பான இதர விளைவுகளிடமிருந்தும் பெண்கள் தப்புவதில்லைங: கண்ணீர் சிந்துவது, பைத்தியகாரி போல சிரிப்பது, வலிப்புநோய்க்குப் பலியாவது மேற்கண்டவைகளோடு, எதேச்சதிகாரசக்திக்கு விட்டுக்கொடுத்து பெண் படுகின்ற வேதனைகள் ஏராளமென்று, உயிரியல் தரவுகளில் மேற்கொண்ட ஆய்வுகள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன: பெண்ணினப் பாலூட்டிகளில் முற்றாக தனது உடல் மீதான உரிமையை இழப்பவளும், அந்த இழப்பிற்கெதிராக யுத்தத்தில் இறங்குவதும் அவளே: வேறெந்த அடிமை முறையிலும், இனப்பெருக்க நிகழ்வு இந்த அளவிற்குக் கோலோச்சுவதோ, அதன் செயல்பாடுகளை மிகுந்த மனவேதனைகளுடன் ஏற்றுகொள்வதோ இல்லை: பருவமடைகிற காலம், மாதவிடாய் நிற்கிற காலம், மாதாந்திர சாபங்கள், பெரும்பாலும் சங்கடத்துடனான நீண்ட பேறுகாலம், பிரசவகாலங்களில் ஏற்படும் வலிகள், ஆபத்து, நோய்கள், விபத்துகள் என மானிடனத்தில் பெண்பாலுக்கான குணாசியங்களைப் பார்க்கிறோம்.

தனது தனித்துவத்தை நிலைநிறுத்திக்கொள்ள அவள் நடத்தும் யுத்தத்தில், எதிரியான ஊழிற்கு வலிமை அதிகமென்றே தோன்றுகிறது. ஆணினத்தைப் இத்துடன் ஒப்பிடுகிறபோது, கூடுதலான சலுகைகள் பெற்றிருப்பது விளங்கும். அவனது பிறப்புறுப்பு வாழ்க்கை, அவனது தனித்துவத்திற்கு எதிரானதல்ல.


அதன் பணிகள் தொய்வில்லாமல், நெருக்கடி களின்றி, பொதுவாக விபத்துகளைச் சந்திக்காமல் நடக்கின்றன. பெண்கள் ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக உயிர்வாழ்வது உண்மை என்ற போதிலும், அடிக்கடி நோய்வாய்ப்படுவதும் அவர்களே. பெரும்பாலான நேரங்களில் பெண், அவளுடையக் கட்டுபாட்டில் இல்லை என்பதும் வெளிப்படை.

உயிரியல் தரவுகள், பெண்ணைப்பற்றி அறிய உதவும் மிகமுக்கியமான காரணிகள். பெண்களின் வரலாற்றில், அவை முதன்மையிடம் வகிக்கின்றன. இனி பல இடங்களில் சொல்லவிருக்கிற விளக்கங்களுக்கு, இவற்றை எடுத்தாள வேண்டியுள்ளது. உலகில் நமது நிலைமையைத் தீர்மானிப்பதில் உடலுக்கும் பங்குண்டு. எனவேதான் உயியல் தரவுகளைப் பற்றி அதிகமாக தெந்து கொண்டோம். பெண்ணைப் புரிந்துகொள்ள உதவும் திறவு கோல்களில் அவைகளும் ஒன்று. ஆனால் அவற்றையெல்லாம் பெண்ணுக்கென எழுதப்பட்ட விதியென்று நம்ப நாம் தயால்லை. உயியல் தரவுகளின் அடிப்படையில் பெண்ணின் படி நிலையை, கணக்கிடுவதும், அவளை வேறு தேசத்தவளாக அதாவது அந்நியராக(other)ப் பார்ப்பதும், கூடாதென்பது நமது வாதம். அதுவும் தவிர உயியல் தரவுகள், ஆண்டாண்டுகாலத்திற்கு பெண்களை அடிமைகளாக இருக்கப்பட வேண்டி யவர் களென்று சொல்லிக் கொண்டிருப்பதில்லை.

0 comments:

 

Blogroll

Site Info

Text

ஏலாதி Copyright © 2009 WoodMag is Designed by Ipietoon for Free Blogger Template

TEMPLATE ERROR: Error during evaluation of all-head-content